ஆர்வம்! கரும்பு விவசாயிகள் முந்திரி சாகுபடிக்கு...4,425 ஏக்கர் பரப்பளவை அதிகரிக்க திட்டம்

தினமலர்  தினமலர்
ஆர்வம்! கரும்பு விவசாயிகள் முந்திரி சாகுபடிக்கு...4,425 ஏக்கர் பரப்பளவை அதிகரிக்க திட்டம்

விருத்தாசலம்:மாவட்டத்தில் குறைவான மழை, என்.எல்.சி., சுரங்கப்பணிகள் உள்ளிட்ட காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், கரும்பு விவசாயிகள் முந்திரி சாகுபடிக்கு ஆர்வம் காட்டுகின்றனர்.மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், பெண்ணாடம், ஏ.சித்துார் தனியார் சர்க்கரை ஆலைகள்; சேத்தியாத்தோப்பு அரசு சர்க்கரை ஆலை ஆகியன உள்ளன. விருத்தாசலம், கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலுார், அண்ணா கிராமம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கரும்புக்கு போதிய விலை இல்லை. மத்திய அரசு அறிவித்து விலை உயர்வை ஆலை நிர்வாகங்கள் வழங்காமல் இழுத்தடிப்பது, குறைவான மழை, நெய்வேலி என்.எல்.சி., சுரங்கப் பணிகளால் வெளியேற்றப்படும் தண்ணீரால் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் போன்றவைகளால் கரும்பு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.பத்து மாதம் ஏராளமாக செலவழித்து, கடுமையாக உழைத்து கரும்பு சாகுபடி செய்து வெட்டி, அனுப்பினால் உரிய நேரத்தில் ஆலை நிர்வாகங்கள் பணம் தர மறுக்கின்றன.தொடர்ந்து உயர்ந்து வரும் உரங்கள் விலை, வெட்டுக்கூலி, கரும்பு வெட்டும் கூலி ஆட்கள் தட்டுப்பாடு போன்றவைகளால் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்ய அச்சமடைகின்றனர்.இதனால், நீண்ட கால பயிராகவும், மானாவாரி பயிராகவும் உள்ள முந்திரி சாகுபடி மீது விவசாயிகளின் கவனம் திரும்பியுள்ளது.இதைப் பயன்படுத்தி தோட்டக்கலைத்துறை தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் நடப்பாண்டில் முந்திரி பரப்பளவை 4,425 ஏக்கர் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதில், 2,212.5 ஏக்கர் சாதாரண நடவு முறையிலும், 2,212.5 ஏக்கர் அடர் நடவு முறையிலும் முந்திரி நடவு செய்யும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக, அடர் நடவு முறைக்கு வி.ஆர்.ஐ.-3 வீரிய ஒட்டு ரக முந்திரி கன்றுகள் 500, சாதாரண நடவுக்கு 200 கன்றுகளும் வழங்கப்பட உள்ளது. கடந்தாண்டு நடப்பட்டு பழுதான பகுதிகளில் 825 எக்டருக்கு 'கேப் பில்லிங்' செய்ய கன்றுகள் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இதனால், ஏற்கெனவே மாவட்டத்தில் 85 ஆயிரம் ஏக்கரில் உள்ள முந்திரி தோப்புகளின் பரப்பளவு, 89,425 ஏக்கராக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து, தோட்டக்கலை அலுவலர் ஒருவர் கூறுகையில், முந்திரி சாகுபடியை அதிகரிக்க தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கரும்பு சாகுபடி செய்வது சவாலாக மாறியுள்ளது.ஆனால், முந்திரி மானாவாரியில் சாகுபடி செய்யக்கூடியது. இதற்கான, பிராசசிங் யூனிட்டுகள் பண்ருட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய உள்ளன. முந்திரி சாகுபடி செய்தால் மூன்றாண்டுகளில் காய்ப்பு துவங்கி, ஐந்தாண்டுகளில் உயர் விலைச்சலைத் தரும்.சீசன் இல்லாத நேரங்களில் ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து முந்திரியை இறக்குமதி செய்து, பிராசஸ் செய்து, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், விவசாயிகள் பொருளாதாரம் உயர வாய்ப்பு உள்ளது' என்றார்.

மூலக்கதை