பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் 8 மணி நேரம் விசாரணை: 3000 கோடி சொத்துக்கள் குறித்து வருமான வரித்துறையினர் சரமாரி கேள்வி

தினகரன்  தினகரன்
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் 8 மணி நேரம் விசாரணை: 3000 கோடி சொத்துக்கள் குறித்து வருமான வரித்துறையினர் சரமாரி கேள்வி

* வீடுகள், பண்ணை வீடுகள்,  நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்தாண்டு  நவம்பர் மாதம் அதிரடி சோதனை நடத்தினர். * 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள்  தொடங்கி நடத்தி வருவது, 150க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் பணம்  பரிமாற்றம் செய்துள்ளது தெரியவந்தது.* 3 ஆயிரம் கோடிக்கும் அதிகம் சொத்து  சேர்த்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த ஆவணங்களைக் கண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் ரூ.3 ஆயிரம் கோடி சொத்து குவிப்பு குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் 8 மணி நேரம் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினர். விசாரணையின்போது பதில் கூற முடியாமல் சசிகலா பல முறை திணறினார்.  சென்னையில் ஜெயலலிதா, சசிகலா வசித்த போயஸ்கார்டன் வீடு, அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், சகோதரர் திவாகரன், மற்றொரு சகோதரர் மகன் விவேக், சகோதரி மகன் தினகரன் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான வீடுகள், பண்ணை வீடுகள், நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்தாண்டு நவம்பர் மாதம் அதிரடி சோதனை நடத்தினர். அதில் 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வருவது, 150க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் பணம் பரிமாற்றம் செய்துள்ளது உள்பட ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகம் சொத்து சேர்த்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது. இப்புகார் தொடர்பாக சசிகலாவின் ரத்த சம்மந்தமான உறவினர்கள், நிறுவனங்களின் பங்குதாரர்கள் உள்பட பலரிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறையில் உள்ள சசிகலாவிடம் மட்டும் விசாரணை நடத்தாமல் இருந்தனர்.  போயஸ்கார்டனில் உள்ள சசிகலாவின் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியபோது, பல தனியார் நிறுவனங்களின் சொத்து ஆவணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக பல கட்டுமான நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் தியேட்டர்களின் ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்களின் அடிப்படையில் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், உயர்மதிப்பு நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தவுடன், பல கோடி ரூபாய் பணம் தனியார் நிறுவனங்களில் கொடுக்கப்பட்டு, அவர்கள் மூலம் பணம் வெள்ளையாக்கப்பட்டன. உயர்மதிப்பு நோட்டுகளை தனியார் நிறுவனங்களில் ெகாடுத்ததால், அந்த நிறுவனங்களின் சொத்து ஆவணங்களை வாங்கி போயஸ்கார்டனில் வைத்திருந்தது தெரியவந்தது. அதேபோல, குட்கா விவகாரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதம், அந்த கடிதத்துடன் தலைமைச் செயலாளர் முதல்வருக்கு எழுதிய கடிதம் ஆகியவையும் அங்கு இருந்தது. இந்த ஆவணங்களைக் கண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.   இதனால், போயஸ்கார்டனில் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் குறித்தும், தனியார் மற்றும் பினாமி நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடு குறித்தும் சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.  சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த பல முறை முயற்சித்தபோது, அவர் அனுமதிக்கவில்லை. சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதிக்கும்படி வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு விசாரணைக்கு வந்தபோது, வீடியோகான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தலாம் என்று சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஐடி அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. அதை தொடர்ந்து ஐடி அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்தலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.பின் சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்ககோரி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு ஐடி அதிகாரிகள் கடிதம் எழுதினர். அதை பரிசீலனை செய்த சிறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினர். அதை தொடர்ந்து டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்த முடிவு செய்த அதிகாரிகள் நேற்று காலை 10.30 மணிக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர். சென்னை வருமான வரித்துறை இணை இயக்குனர் வீரராகவராவ் தலைமையில் ஒரு பெண் அதிகாரி உள்பட மொத்தம் 9 அதிகாரிகள் சிறையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். தனி அறையில் சசிகலாவை அமரவைத்து ரூ.3 ஆயிரம் கோடி சொத்து தொடர்பாக 500க்கும் மேற்பட்ட கேள்விகளை அவர்கள் கேட்டு பதில் பெற்றதாக தெரிகிறது.  காலை 11 மணிக்கு விசாரணையை தொடங்கிய அதிகாரிகள், இரவு 7.30 மணிக்கு விசாரணையை முடித்தனர். சுமார் 8 மணி நேரம் விசாரணை நடந்தது. அவர்கள் ஏற்கனவே தயாரித்து எடுத்து சென்ற கேள்விகளுக்கு சசிகலா ஆம், இல்லை என்ற பதில் மட்டும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மதியம் அரை மணி நேரம் சசிகலாவுக்கு உணவு சாப்பிட நேரம் தரப்பட்டது. அதன்பின்னர், மீண்டும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டனர். சசிகலாவிடம் இன்றும் வருமானவரி அதிகாரிகளின் விசாரணை தொடரும் என்று தெரியவருகிறது.

மூலக்கதை