சில்லரை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு:சி.ஐ.ஐ., யோசனைக்கு வியாபாரிகள் கூட்டமைப்பு கண்டனம்

தினமலர்  தினமலர்
சில்லரை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு:சி.ஐ.ஐ., யோசனைக்கு வியாபாரிகள் கூட்டமைப்பு கண்டனம்

ஆமதாபாத்:‘பல்பொருள் சில்லரை விற்பனையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும்’ என, சி.ஐ.ஐ., விடுத்த கோரிக்கைக்கு, இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பான, எப்.ஏ.ஐ.வி.எம்., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இது குறித்து, இக்கூட்டமைப்பின் தேசிய செயல் தலைவர், சி.எச்.கிருஷ்ணா கூறியதாவது: பல்பொருள் சில்லரை விற்பனையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என, சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழிலக கூட்டமைப்பு, சமீபத்தில், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


இந்த கூட்டமைப்பு, பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன் பெற, இந்த யோசனையை தெரிவித்துள்ளது. சிறு வியாபாரிகளுக்கான கொள்கைகளில், அரசுக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குகிறது.அமைப்பு சாராத சிறிய வர்த்தகப் பிரிவு, நாடு முழுவதும், 44 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. ஆனால், சி.ஐ.ஐ., கூட்டமைப்பில் உள்ள, அமைப்பு சார்ந்த நிறுவனங்கள், 2.50 கோடி பேருக்குத் தான் வேலைவாய்ப்பை வழங்குகின்றன.


பல்பொருள் துறையில், 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதித்தால், சிறிய வியாபாரிகள் பாதிக்கப்படுவர்.ஆகவே, சி.ஐ.ஐ., தெரிவித்த யோசனையை, மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது.அது மட்டுமின்றி, தற்போது, ஒரு பிராண்டு சில்லரை விற்பனையில் அனுமதிக்கப் பட்ட, 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை குறித்தும், மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பல்பொருள் சில்லரை விற்பனையில், தற்போது, 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை