பந்தை எறிவதாக புகார் அகிலா தனஞ்ஜெயா சஸ்பெண்ட்

தினகரன்  தினகரன்
பந்தை எறிவதாக புகார் அகிலா தனஞ்ஜெயா சஸ்பெண்ட்

துபாய்: இலங்கை அணி சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்துவீச்சு விதிமுறைகளுக்கு புறம்பாக உள்ளது நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சர்வதேச போட்டிகளில் அவர் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து அணியுடன் காலே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, அகிலா தனஞ்ஜெயாவின் பந்துவீச்சு எறிவது போல உள்ளதாக நடுவர்கள் புகார் செய்தனர். அந்த போட்டியில் இலங்கை அணி 211 ரன் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் கடந்த நவம்பர் 23ம் தேதி அவரது பந்துவீச்சு முறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.அந்த ஆய்வில் அகிலாவின் முழங்கை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கும் மேலாக வளைவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ஐசிசி நேற்று அறிவித்தது. எனினும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடலாம் என்று தெரிவித்துள்ள ஐசிசி, தனது பந்துவீச்சு பாணியில் உரிய மாற்றங்களை மேற்கொண்ட பிறகு, மறு ஆய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இளம் ஸ்பின்னரான அகிலா (25 வயது) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை