11 ரன்னுக்கு 10 விக்கெட் யு-19 போட்டியில் அசத்தல்

தினகரன்  தினகரன்
11 ரன்னுக்கு 10 விக்கெட் யு19 போட்டியில் அசத்தல்

அனந்தபூர்: கூச் பேஹர் டிராபி யு-19 கிரிக்கெட் போட்டியில், மணிப்பூர் அணி வேகப் பந்துவீச்சாளர் ரெக்ஸ் ராஜ்குமார் சிங் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.அனந்தபூரில் நடந்த இப்போட்டியில் (4 நாள் ஆட்டம்) மணிப்பூர் - அருணாச்சல பிரதேசம் மோதின. முதல் இன்னிங்சில் அருணாச்சல் அணி 138 ரன்னும், மணிப்பூர் அணி 122 ரன்னும் எடுத்தன. 16 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய அருணாச்சல் அணி, ரெக்ஸ் ராஜ்குமார் சிங்கின் (18 வயது) வேகத்தை சமாளிக்க முடியாமல் 36 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 9.5 ஓவரில் 6 மெய்டன் உட்பட 11 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்த ரெக்ஸ் 10 விக்கெட்டையும் முழுமையாக அள்ளி அனில் கும்ப்ளேவின் சாதனையை நினைவூட்டினார். இவர் முதல் இன்னிங்சிலும் 5 விக்கெட் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து களமிறங்கிய மணிப்பூர் 7.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 55 ரன் எடுத்து எளிதாக வென்றது.

மூலக்கதை