5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி: பாஜ எம்பிக்களுடன் மோடி ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி: பாஜ எம்பிக்களுடன் மோடி ஆலோசனை

புதுடெல்லி:  ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில், பாஜ தோல்வியை தழுவியுள்ள நிலையில், பாஜ எம்பிக்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். மாலையில் செயற்குழுவும் அவசரமாக கூடி விவாதிக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.

இதில், பாஜ ஆட்சி செய்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்த நிலையில், காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. தெலங்கானா மாநிலத்தில் கடந்த தேர்தலில் 5 தொகுதிகளில் வென்ற பாஜ, இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மிசோரம் மாநிலத்திலும் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜ வென்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.



ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகியவை பாஜ பலமாக இருக்கும் மாநிலங்களாகும். செல்வாக்கு மிக்க இந்த மாநிலங்களில் பாஜ ஆட்சியை இழந்துள்ளது அக்கட்சியின் தலைவர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று பாஜ எம்பிக்கள் கூட்டத்தில் உரையாற்றினார். 5 மாநில தேர்தல் தோல்வி குறித்தும், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் எம்பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

எம்பிக்களுடனான கூட்டம் முடிந்ததும், பாஜ தேசிய  தலைவர் அமித்ஷா தலைமையில், பாஜ ஆளும்  மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம்  நடைபெறுகிறது. இதில், கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.



தற்போதைய வெற்றியை நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. மாநிலங்களில் பலமாக உள்ள கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

பாஜவுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகள் இணையும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், 114 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.

பெரும்பான்மைக்கு 2 இடங்கள் தேவை என்ற நிலையில், மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.   இதேபோல், நாடாளுமன்ற தேர்தலிலும் முக்கிய கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்புள்ளதால், கடுமையான சவாலை சந்திக்க வேண்டிய நிலை பாஜவுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உத்திரப்பிரதேசத்தில், பகுஜன், சமாஜ்வாடி, காங்கிரஸ் 3ம் ஒன்று சேர்ந்தால் 80 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜக வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இதனால் நாடு முழுவதும் எழுந்துள்ள பாஜ எதிர்ப்பு அலையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து விவாதிக்க இன்று மாலை பாஜ செயற்குழுவும் அவசரமாக கூடுகிறது.

.

மூலக்கதை