பெங்களூரு சிறையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை: ரூ. 3 ஆயிரம் கோடிக்கு ேமல் சொத்துக்கள் குறித்து சரமாரி கேள்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெங்களூரு சிறையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை: ரூ. 3 ஆயிரம் கோடிக்கு ேமல் சொத்துக்கள் குறித்து சரமாரி கேள்வி

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர், இன்று காலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேல் உறவினர்கள் சொத்து சேர்த்தது குறித்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

சென்னையில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான வீடு, அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அக்கா மகன் டிடிவி தினகரன், சகோதரர் மகன் விவேக், அவரது உறவினர்கள், பினாமிகளுக்குச் சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்தாண்டு சோதனை நடத்தினர். அதில் 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வருவது, 150க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் பணம் பரிமாற்றம் செய்துள்ளது உள்பட ரூ. 3000 கோடிக்கும் அதிகம் சொத்து சேர்த்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.



இப்புகார் தொடர்பாக சசிகலாவின் ரத்த சம்மந்தமான உறவினர்கள், நிறுவனங்களின் பங்குதாரர்கள் உள்பட பலரிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் பினாமிகளின் சொத்துக்களை வருமான வரித்துறை அதிகரிகள் முடக்கி வைத்தனர்.

இது குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது. இந்த விவகாரத்தில், சிறையில் உள்ள சசிகலாவிடம் மட்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தாமல் இருந்தனர்.

சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்ககோரி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு ஐடி அதிகாரிகள் கடிதம் எழுதினர். அதை பரிசீலனை செய்த சிறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினர்.

அதை தொடர்ந்து டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்த முடிவு செய்த அதிகாரிகள் இன்று காலை 10. 30 மணிக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர்.

ஐடி அதிகாரி வீரராகவராவ் தலைமையில் ஒரு பெண் உள்பட 5 அதிகாரிகள் சிறையில் சசிகலாவிடம் விசாரணை தொடங்கியுள்ளனர்.

இன்று மாலை வரை இந்த விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணை நாளையும் தொடரும்.

சொத்து குவிப்பு தொடர்பாக, 500க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு பதில் பெறுவார்கள் என்று தெரியவருகிறது. உறவினர்கள், பினாமிகள் சொத்து குவிப்பு தொடர்பாக சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விசாரைணயைப் பொறுத்தே, சசிகலா மீது புதிய வழக்குப் பதிவு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை