ஹூவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம்: கனடா தொழிலதிபரை கைது செய்து மிரட்டும் சீனா

தினகரன்  தினகரன்
ஹூவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம்: கனடா தொழிலதிபரை கைது செய்து மிரட்டும் சீனா

சீனா: ஹூவாய் நிறுவனத் தலைவரின் மகளை கனடா கைது செய்த நிலையில், அதற்கு பதிலாக கனடாவை சேர்ந்த 2வது நபரை சீனா கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதிஅதிகாரி மிங்கை அந்நாட்டு அரசு கைது செய்தது. ஈரான் மீதான தடைகளை மதிக்காமல் அந்நாட்டுக்கு அவர் உதவியதால் அமெரிக்கா பிறப்பித்த உத்தரவின்படி அவர் கைது செய்யப்பட்டார். கனடாவின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என கடும் கண்டனம் தெரிவித்த சீனா, அவரை உடனடியாக விடுவிக்காவிட்டால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தது. இந்நிலையில் கனடா அரசை பழிவாங்கும் விதத்தில், அந்நாட்டை சேர்ந்த ஒருவரை சீனா கைது செய்திருந்தது. தற்போது 2வது நபராக கனடா தொழிலதிபர் மைக்கேல்ஸ் போவோர்ட் என்பவரும் வடகொரிய எல்லை அருகே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை உறுதி செய்துள்ள கனடாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், சீனாவில் அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிந்து கொள்வதற்காக தொடர்ந்து முயன்று வருவதாக கூறியுள்ளார். அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விவரங்கள் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். அதேசமயம் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர்களின் நடவடிக்கை இருந்ததால் கைது செய்யப்பட்டதாக சீனா விளக்கமளித்துள்ளது. இதற்கிடையே வடகொரிய அதிபர் கின்சாங்கின் நெருக்கமான நண்பரான முன்னாள் விளையாட்டு வீரர் டென்னிஸ் ராட்வீனை சந்திப்பதற்காக கனடா தொழிலதிபர் மைக்கேல் வடகொரியாவிற்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை