ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு போட்டி அசோக் கெலாட், சச்சின் பைலட் டெல்லி பயணம்: ராகுல் காந்தியுடன் சந்திப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு போட்டி அசோக் கெலாட், சச்சின் பைலட் டெல்லி பயணம்: ராகுல் காந்தியுடன் சந்திப்பு

புதுடெல்லி: ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றிபெற்ற நிலையில், முதல்வர் பதவிக்கு போட்டி எழுந்துள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் இன்று டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்தனர்.

ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் காங்கிரசும், 73ல் பாஜவும் வெற்றிபெற்றன. தனிப்பெரும்பான்மை கிடைத்த நிலையில், காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

முதல்வர் பதவிக்கு காங்கிரஸின் மூத்த தலைவர் அசோக் கெலாட், மாநில தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. யாருக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.

இருவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர். முதல்வரை தேர்வு செய்யும் பொறுப்பு ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முதல்வர் பெயரை அறிவிக்கவுள்ளார் ராகுல் காந்தி.

அனேகமாக அசோக் கெலாட்டுக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதேபோல், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களுக்கான முதல்வர்களையும் காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்க வாய்ப்புள்ளது.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத், ஜோதிர்தியா சிந்தியா ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. இதில், கமல்நாத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சட்டீஸ்கரில் மூத்த தலைவர் சரண்தாஸ் மகந்த், மாநில தலைவர் பூபேஷ் பாகெல், சிங் தியோ, தம்ரத்வஜ் சாஹூ ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

.

மூலக்கதை