ஐஎஸ் இயக்கத்தில் சேர 10 பேர் ஆப்கானிஸ்தான் பயணம்: கேரளாவில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐஎஸ் இயக்கத்தில் சேர 10 பேர் ஆப்கானிஸ்தான் பயணம்: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 10 பேர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்காக ஆப்கானிஸ்தான் சென்றுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சிரியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதன்பின்னர் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) விசாரணை நடத்தியது.

விசாரணையில் கேரளாவில் இருந்து சென்ற அனைவரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் ேசர்ந்தது உறுதி செய்யப்பட்டது. கண்ணூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 35 பேர் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்ததும் தெரியவந்தது.   சில மாதங்களுக்கு முன்பு இவர்களில் 5 பேரை துருக்கி போலீசார் கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவர்களில் சிலர் அமெரிக்க ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதும் தெரியவந்தது.

இந்த நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் இருந்து மேலும் 10 பேர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கண்ணூர் அழிக்கோடு அருகே பூதப்பாறையை சேர்ந்த 2 குடும்பத்தினரும், குருவா பகுதியை சேர்ந்த ஒருவரும் ஆப்கானிஸ்தான் சென்றுள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

பூதப்பாறையை சேர்ந்த சஜ்யாத், அவரது மனைவி ஷாஹினா, அவர்களது 2 குழந்தைகள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அன்வர், அவரது மனைவி அப்சிலா, அவர்களது 3 குழந்தைகள் மற்றும் குருவாவை சேர்ந்த நிஜாம் ஆகியோர் கடந்த மாதம் 20ம் தேதி தங்கள் உறவினர்களிடம் மைசூர் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் 3 நாட்களில் திரும்பி விடுவோம் என கூறியுள்ளனர்.

ஆனால் 2 வாரங்களுக்கு மேலாகியும் அவர்கள் திரும்பவில்லை. இதுகுறித்து உறவினர்கள் கண்ணூர் போலீசில் புகார் செய்தனர்.

கண்ணூர் டிஎஸ்பி சதானந்தன் தலைமையிலான போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் ஐஎஸ் இயக்கத்தில் சேர்வதற்காக துபாய் வழியாக ஆப்கானிஸ்தான் சென்றது தெரியவந்தது.

இவர்களுக்கு ஏற்கனவே சில தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. கடந்த ஆண்டு கண்ணூர் பாப்பினிச்சேரி பகுதியை சேர்ந்த ஷமீர் மற்றும் அவரது மனைவி பவுபியா ஆகியோர் ஐஎஸ் இயக்கத்தில் சேர ஆப்கானிஸ்தான் சென்றனர்.

பின்னர் அமெரிக்க ராணுவ தாக்குதலில் ஷமீர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பவுபியாவின் தங்கைதான் தற்போது ஆப்கானிஸ்தான் சென்றதாக கூறப்படும் அன்வரின் மனைவி அப்சிலா ஆவர்.

இதுபோல சஜ்யாத்தும், சமீரும் நெருங்கிய நண்பர்களாவர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை