மூன்று நிமிடத்துக்கு ஒரு 'பிளாஸ்டிக்' : நீச்சல் வீரர் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
மூன்று நிமிடத்துக்கு ஒரு பிளாஸ்டிக் : நீச்சல் வீரர் எச்சரிக்கை

டோக்கியோ: கடலில் மூன்று நிமிடத்துக்கு ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கிடைத்ததாக பிரான்ஸ் நீச்சல் வீரர் பென் லொகோமிட் தெரிவித்துள்ளார்.பிரான்சின் நீச்சல் வீரர் பென் லொகோமிட் 51. இவர் கடந்த ஜூன் 5ல் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஜப்பானில் இருந்து பசுபிக் கடல் பகுதியில் அமெரிக்காவின் ஜான் பிரான்சிஸ்கோ நகருக்கு நீச்சல் பயணத்தை தொடங்கினார். பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து பெருங்கடல்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இவரது நீச்சல் பயணத்தின் நோக்கம். இவருடன் படகில் அறிவியலாளர்கள் குழுவும் பயணித்தனர். இவர்கள் கடல்நீர் மாதிரிகளை எடுத்து, கடல் மாசுபாடு குறித்த ஆய்வில் ஈடுபட்டனர். நீச்சல் பயணம் தொடங்கி ஆறு மாதத்துக்குப்பின், மோசமான வானிலை காரணமாக, மத்திய பசிபிக் கடலின் ஹாவாய் தீவில் முடித்துக் கொண்டார். இதன்மூலம் பசுபிக் கடலில் நீந்தி சான் பிரான்சிஸ்கோ செல்லும் அவரது திட்டம் கைவிடப்பட்டது. சான்பிராஸ்சிஸ்கோ சென்றிருந்தால், பசுபிக் கடலில் நீந்திய முதல் வீரர் என்ற பெருமை பெற்றிருக்கலாம். ஆனால் அந்த இலக்கை இன்னும் கைவிடவில்லை, அடுத்த முறை முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.இந்த நீச்சல் பயணத்தின் முடிவில், 'மூன்று நிமிடத்துக்கு ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் தென்பட்டது என்ற எச்சரிக்கையை உலகுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடன் சென்ற குழுவினர், '' சில நேரங்களில் சுறா மீன்களுடன் நீந்தும் நிலை ஏற்பட்டது. அவ்வப்போது பெரிய பிளாஸ்டிக் பொருட்கள் மிதந்து வந்தன. பல நமது வீட்டில் பயன்படுத்துபவை. 30 நிமிடங்களில் 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கிடைத்தன. இதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், சில ஆண்டுகளில் கடல்வளம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது'' என்றனர்.

மூலக்கதை