உலக முதலீட்டாளர்கள் மாநாடு 4 மாவட்டங்கள் முன்னிலை

தினமலர்  தினமலர்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 4 மாவட்டங்கள் முன்னிலை

தமிழகத்தில், 2019ல் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு, நான்கு மாவட்டங்கள் மட்டுமே, இலக்கை எட்டுவதில் முன்னணியில் உள்ளன. இதர மாவட்டங்கள், 50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான அளவில் பின்தங்கியுள்ளன.


தமிழக அரசு சார்பில், சென்னை வர்த்தக மையத்தில், 2019 ஜன., 23, 24ல், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கஉள்ளது. அதற்காக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இலக்கு நிர்ணயித்து, முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.சேலம் மாவட்டத்துக்கு, 1,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து, மாவட்ட தொழில் மையம், அப்பணியில் செயல்பட்டு வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்களை அழைத்து, முதலீடுகளை ஈர்த்து வருகிறது.


கடந்த செப்டம்பர் முதல், இதுவரை, 386 தொழில் நிறுவனங்கள் மூலம், 803.71 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இலக்கை அடைய, பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.இது குறித்து, தொழில் மைய மேலாளர், ராமச்சந்திரன் கூறியதாவது:முதலீட்டை ஈர்ப்பதற்கான வழிமுறை கட்டமைப்பை ஏற்படுத்துதல், முதலீட்டை ஈர்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மாவட்டத்தில், முதலீடுகள் மூலம், 9,887 பேருக்கு, புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கு வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கான பணி நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


ஈரோடு மாவட்டத்துக்கு, 1,500 கோடி ரூபாய் இலக்கு. இதுவரை, 1,324.63 கோடி ரூபாய் ஈர்க்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்துக்கு, 880 கோடி ரூபாய்; ஈர்க்கப்பட்டது, 619.36 கோடி ரூபாய்.நாமக்கல் மாவட்டத்துக்கு, 1,200 கோடி ரூபாய்; ஈர்க்கப்பட்ட தொகை, 1,085.58 கோடி ரூபாய். சேலம் உட்பட நான்கு மாவட்டங்கள் மட்டுமே, இலக்கு தொகையில், 80 சதவீதத்தை எட்டியுள்ளன. மீதி மாவட்டங்கள், 50 சதவீதம் மற்றும் அதற்கும் குறைவான அளவில் பின்தங்கியுள்ளன.


மூலக்கதை