ரிசர்வ் வங்கியின் 25-வது ஆளுநராக பதவியேற்று கொண்டார் சக்திகாந்த தாஸ்

தினகரன்  தினகரன்
ரிசர்வ் வங்கியின் 25வது ஆளுநராக பதவியேற்று கொண்டார் சக்திகாந்த தாஸ்

டெல்லி: ரிசர்வ் வங்கியின் 25-வது ஆளுநராக சக்தி காந்த தாஸ் இன்று பதவியேற்று கொண்டார். மத்திய முன்னாள் நிதித்துறை செயலாளரும், மத்திய நிதிக்குழுவின் உறுப்பினருமான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவியேற்றுள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சக்திகாந்த தாஸ்(63) ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக சக்தி காந்ததாஸ் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.ரகுராம் ராஜனுக்கு பிறகு உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னரானார். இவர் கென்யாவில் பிறந்தவர். இவரது பெற்றோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநராக உர்ஜித் படேல் பதவி ஏற்று கொண்டார். உர்ஜித் படேலை மத்திய அரசு பதவியில் அமர்த்தியபோது, குஜராத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த பதவி கிடைத்ததாக விமர்சனங்கள் எழுந்தது. உபரியாக உள்ள பணம் தொடர்பாக மத்திய அரசு - ரிசர்வ் வங்கி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. ரிசர்வ் வங்கியின் உபரி பணத்தை சந்தையில் திருப்பிவிட மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு மத்திய அரசின் கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனையடுத்து சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்து கொள்வதாக உர்ஜித் படேல் அறிவித்த நிலையில்,  சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று பதவியேற்று கொண்டுள்ளார்.

மூலக்கதை