‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில் பருவ நிலையால் விற்பனை சரிவு

தினமலர்  தினமலர்
‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில் பருவ நிலையால் விற்பனை சரிவு

சேலம்:தமிழகத்தில் ஏற்பட்டுஉள்ள பருவ நிலை மாற்றத்தால், ‘அம்மா’ மினரல் வாட்டர் பாட்டில் விற்பனை சரிந்துள்ளது.


தமிழக அரசு போக்குவரத்துக்கழக, சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம், திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், அம்மா மினரல் வாட்டர் பாட்டில் தயாரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும், 335 விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும், இரண்டு லட்சம் பாட்டில்கள் உற்பத்தி செய்து வினியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், பல மாவட்டங்களில் திடீரென மழை பெய்து வருகிறது.


சேலம் உள்ளிட்ட மேற்கு மண்டலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இரவில் கடும் பனிப் பொழிவும், பகல் நேரங்களில் குளிர் காற்றும் வீசுகிறது. இதனால், அம்மா மினரல் வாட்டர் பாட்டில் விற்பனை சரிந்துள்ளது.கடந்த நவம்பர் மாதம் வரை, தினமும் சராசரியாக, 1.80 லட்சம் முதல், 1.95 லட்சம் பாட்டில்கள் விற்பனையாகின. தற்போது பாட்டில்களின் விற்பனை, 1.10 லட்சமாக குறைந்துள்ளது.


அதே நேரத்தில், உற்பத்தி நிலையத்தில் இருந்து, விற்பனைக்கு அனுப்பப்படும் பாட்டில்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை.இதனால், சேலம், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட, தமிழகத்தின் அனைத்து முக்கிய நகர, பஸ் ஸ்டாண்டுகளில், பாட்டில்கள் மலை போல் குவிந்துள்ளன.

மூலக்கதை