துவங்கட்டும் திட்டச்சாலை பணி திறக்கட்டும் கஜானா! ஏன் காத்திருக்க வேண்டும் இனி!

தினமலர்  தினமலர்
துவங்கட்டும் திட்டச்சாலை பணி திறக்கட்டும் கஜானா! ஏன் காத்திருக்க வேண்டும் இனி!

கோவை:கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தில் இருந்து, கட்டட அபிவிருத்தி கட்டணமாக செலுத்திய தொகை ரூ.42 கோடி, கஜானாவில் துாங்குகிறது. இதை பயன்படுத்தி திட்டச்சாலைகள் உருவாக்கி, நகரின் போக்குவரத்து நெரிசலில் இருந்து, மக்களை காப்பாற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவையில் ஆக்கிரமிப்புகளால், அனைத்து ரோடுகளிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஒரு ரோட்டில் இருந்து இன்னொரு ரோட்டுக்குச் செல்ல, இணைப்பு சாலை இல்லாமல் இருக்கிறது.இதற்கு தீர்வு காண, 25 ஆண்டுகளுக்கு முன்பே, நகர்ப்பகுதியில், 258 இடங்களில் திட்டச்சாலைகளை உருவாக்க, உள்ளூர் திட்டக்குழுமம் திட்டமிட்டு, ஏரியாக்களை வகுத்தது.
மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் முனைப்பு காட்டாததால், திட்டச்சாலைகள் உருவாக்கப்படவே இல்லை.கஜானாவில் பணம்அ.தி.மு.க.,வை சேர்ந்த ராஜ்குமார், மேயராக இருந்தபோது, வார்டுக்கு ஒன்று வீதம், 100 திட்டச்சாலைகள் உருவாக்கப்படும் என அறிவித்தார். இதற்கான முயற்சிகளில் மாநகராட்சி அதிகாரிகளோ, உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகளோ இறங்கவில்லை. திட்டச்சாலை உருவாக்குவதற்காக ஒதுக்கிய நிதி, அரசின் கஜானாவில் பயன்பாடின்றி உறங்குகிறது.தகவல் அறியும் உரிமைச்சட்டம்பூளைமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் துணை தலைவர் கருணாநிதி, நகர ஊரமைப்பு துணை இயக்குனருக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சில கேள்விகள் கேட்டிருந்தார்.அதில், 'கோவை உள்ளூர் திட்டக்குழுமம் சார்பில், கட்டட அபிவிருத்தி கட்டணமாக, 2009 முதல் இன்று வரை செலுத்தியதொகை எவ்வளவு, திட்டச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த, பூங்கா அமைக்க அல்லது வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கியிருந்தால், அதைப்பற்றிய தகவல்களை தருமாறு' கேட்டிருந்தார்.அதற்கு, 2009 முதல், 2018 வரை, ஒன்பது ஆண்டுகளில், கட்டட அபிவிருத்தி கட்டணமாக ரூ.43.25 கோடி பெறப்பட்டுள்ளது எனவும், 2010ல், செம்மொழி மாநாடு நடந்தபோது, மாநகராட்சி மூலம் மூன்று புதிய இணைப்பு சாலைகளுக்கு நிலம் எடுத்து, சாலை அமைக்கும் பணிக்கு, உள்ளூர் திட்ட குழும நிதியில் இருந்து, ரூ.13.25 கோடி ஒதுக்கப்பட்டது;
பின், 2018ல் வடவள்ளி விரிவு அபிவிருத்தி திட்டத்தில், திட்டச்சாலை அமைக்கும் பணிக்கு ரூ.43.68லட்சம் வழங்கப்பட்டது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.உறங்குகிறது நிதி2010க்குபின், 2018 வரை, எட்டு ஆண்டுகளாக நிதி கோரப்படாமல், ரூ.42 கோடி கஜானாவில் துாங்குகிறது. வாகன பெருக்கத்துக்கேற்ப சாலையை அகலப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், தேவை யான நிதியை, உள்ளூர் திட்டக்குழுமத்தில் இருந்து பெறலாம். பணிகளை மேற்கொள்ளலாம்.அதை செய்யாமல், அரசு துறை அதிகாரிகள் மவுனம் சாதிப்பது ஏன்?

மூலக்கதை