‘பிட்காய்ன்’ முதலீடு 82 சதவீதம் சரிவு

தினமலர்  தினமலர்
‘பிட்காய்ன்’ முதலீடு 82 சதவீதம் சரிவு

புதுடில்லி:மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காய்ன்’ விலை, கடும் சரிவை சந்தித்து வருகிறது.கடந்த ஆண்டு இதே மாதத்தில், 19 ஆயிரம் டாலருக்கு மேல் இருந்த பிட்காய்ன் மதிப்பு, இப்போது, 3,482 டாலர் என்ற அளவுக்கு சரிந்து விட்டது.
இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதென்றால், கடந்த ஆண்டு டிசம்பர், 11ம் தேதியன்று, ஒரு பிட்காய்ன் மதிப்பு, 13 லட்சத்து, 79 ஆயிரம் ரூபாயாக இருந்தது. நேற்று, 2 லட்சத்து, 48 ஆயிரம் ரூபாயாக சரிந்துவிட்டது.பிட்காய்ன், 2009ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டில்தான் இந்திய முதலீட்டாளர்களிடம் அது குறித்த ஆர்வம் அதிகரித்தது.
இதையடுத்து, ரிசர்வ் வங்கி, பிட்காய்ன் உள்ளிட்ட மெய்நிகர் நாணயங்கள் மீதான முதலீடுகள் குறித்து எச்சரிக்கை விடுத்தது.’தனியார் நிறுவனங்கள் வெளியிடும் இந்த வகை கரன்சிகளுக்கு, சட்டப்பூர்வ மதிப்பு கிடையாது.இந்த கரன்சிகளின் பரிவர்த்தனையை கட்டுப்படுத்த, எந்தவொரு ஒழுங்குமுறை அமைப்பும் இல்லை’ என அறிவித்தது, ரிசர்வ் வங்கி.இருப்பினும், பல முதலீட்டாளர்கள், பிட்காய்ன் முதலீட்டை தொடர்ந்து செய்து வந்தனர். காரணம், அதன் அதீத வளர்ச்சி.ஆனால், 2018ம் ஆண்டு துவங்கியதில் இருந்து, பிட்காய்ன் மதிப்பு தொடர்ந்து குறைய துவங்கியது. ஓராண்டு காலத்தில், 82 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.
வழக்கமான கரன்சிகளில் செய்யும் முதலீடுகள் அதிகரித்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் பிட்காய்ன் பழைய பொலிவை பெறும் என்று சில முதலீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், வேறு சிலர், இந்த முதலீட்டிருந்து வெளியேறி விடுவது நல்லது என்று எச்சரிக்கின்றனர். முதலீட்டு ஆலோசகரான வாரன் பபெட், ஆரம்பத்திலிருந்தே இந்த வகை முதலீட்டை ஆதரிக்கவில்லை.இந்நிலையில், பிட்காய்ன் மதிப்பு மேலும் உயருமா அல்லது, சரிவு தொடருமா... என்பதை அறியமுடியாமல் தவிப்பில் இருக்கின்றனர், பிட்காய்ன் முதலீட்டாளர்கள்.

மூலக்கதை