இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்கள், ‘சூப்பர்’:மத்திய அரசுக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு

தினமலர்  தினமலர்
இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்கள், ‘சூப்பர்’:மத்திய அரசுக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு

வாஷிங்டன்:‘‘கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்தியா, மிக திடமான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது,’’ என, பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனர், மாரிஸ் ஆப்ஸ்ட்பெல்டு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு, ஜி.எஸ்.டி., திவால் சட்டம் உட்பட, உண்மையாகவே, சில அடிப்படை சீர்திருத்தங்களை செய்துள்ளது.
அதில், அனைத்து மக்களுக்கும் நிதிச் சேவைகள் கிடைக்க வழி வகை செய்தது, மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும்.கடந்த நான்கரை ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளால், நாடு, திடமான பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது.இந்த ஆண்டு, ஜூலை – செப்., காலாண்டில், பெரிய அளவில் வளர்ச்சி இல்லையென்றாலும், ஒட்டுமொத்த அளவில், வளர்ச்சி நன்கு உள்ளது.இதில், சில தடங்கல்கள் ஏற்பட்டாலும், பொதுத் தேர்தல் வர உள்ள போதிலும், சீர்திருத்த நடவடிக்கைகள் மட்டும் தொய்வின்றி தொடர வேண்டும்.நிதிப் பற்றாக்குறை இலக்கை பராமரிக்க வேண்டும்.இந்தியாவில், நீண்ட காலமாக, அடிப்படை கட்டமைப்பு திட்டங்களின் மோசமான நிலைக்கும், நிறுவனங்களின் வாராக் கடனுக்கும் தொடர்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசு, வங்கித் துறையை மேம்படுத்த எடுத்த நடவடிக்கையால், வாராக் கடன்கள், நிழல் வங்கி எனப்படும், அமைப்பு சாரா பணப்பரிவர்த்தனைக்கு மாறி உள்ளது. இதனால் ஏற்படும் நிதி அழுத்தங்கள் கவனிக்கப்பட வேண்டும். இந்தியா அதில் கவனம் செலுத்தும் என, தெரிகிறது.முந்தைய அனுபவங்களின்படி, நிதி இடர்ப்பாடுகள் விரைவில் மறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
கீதா கோபிநாத்பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர், மாரிஸ் ஆப்ஸ்ட்பெல்டு, இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக, இந்தியரான, கீதா கோபிநாத், பதிவியேற்க உள்ளார். இவர், ரகுராம் ராஜனைத் தொடர்ந்து, இப்பொறுப்பிற்கு வரும், இரண்டாவது இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை