ஆயிரம் ஆயிரம் காலம் அடிலெய்டு ஞாபகம் * இந்தியா வெற்றி துவக்கம் | டிசம்பர் 10, 2018

தினமலர்  தினமலர்
ஆயிரம் ஆயிரம் காலம் அடிலெய்டு ஞாபகம் * இந்தியா வெற்றி துவக்கம் | டிசம்பர் 10, 2018

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 250, ஆஸ்திரேலியா 235 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்தது. பின், 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, 4ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது.

பும்ரா அசத்தல்

நேற்று 5ம் நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் (14), இஷாந்த் ‘வேகத்தில்’ வெளியேறினார். அஷ்வின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஷான் மார்ஷ், டெஸ்ட் அரங்கில் தனது 10வது அரைசதத்தை பதிவு செய்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்த போது பும்ரா பந்தில் மார்ஷ் (60) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய பும்ரா, டிம் பெய்னை (41) வெளியேற்றி திருப்பம் தந்தார்.

அஷ்வின் அபாரம்

பின் இணைந்த பட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் ஜோடி பொறுப்பாக ஆட, ‘டென்ஷன்’ ஏற்பட்டது. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த ஸ்டார்க், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். எட்டாவது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்த போது ஷமி ‘வேகத்தில்’ ஸ்டார்க் (28) வெளியேறினார். அடுத்து வந்த நாதன் லியானுடன் இணைந்து கம்மின்ஸ் போராடினார். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 31 ரன் சேர்த்த போது பும்ரா பந்தில் கம்மின்ஸ் (28) ‘பெவிலியன்’ திரும்பினார். அஷ்வின் ‘சுழலில்’ ஹேசல்வுட் (13) சிக்க, மறக்க முடியாத வெற்றியை இந்தியா பெற்றது.

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 291 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. நாதன் லியான் (38) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் பும்ரா, அஷ்வின், ஷமி தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் விருதை இந்தியாவின் புஜாரா கைப்பற்றினார்.

இந்த வெற்றியின்மூலம் தொடரில் இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் 14ல் பெர்த்தில் துவங்குகிறது.

 

11

கீப்பிங்கில் அசத்திய இந்தியாவின் ரிஷாப் பன்ட், 2 இன்னிங்சிலும் சேர்த்து 11 ‘கேட்ச்’ (6 + 5) செய்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் ஒரு போட்டியில் அதிக ‘கேட்ச்’ (தலா 11 ‘கேட்ச்’) செய்த விக்கெட் கீப்பர் பட்டியலில் முதலிடத்தை இங்கிலாந்தின் ஜாக் ரசல் (எதிர்: தெ.ஆ., இடம்: ஜோகனஸ்பர்க், 1995), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (எதிர்: பாக்., இடம்: ஜோகனஸ்பர்க், 2013) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

* தவிர, ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ‘கேட்ச்’ செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனை படைத்தார். இதற்கு முன், இந்த ஆண்டு கேப்டவுனில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியாவின் விரிதிமன் சகா 10 ‘கேட்ச்’ செய்திருந்தது சாதனையாக இருந்தது.

6

அடிலெய்டு டெஸ்டில் வென்ற இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 6வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை இங்கு விளையாடிய 45 டெஸ்டில், 6 வெற்றி, 11 ‘டிரா’, 28 தோல்வியை பதிவு செய்துள்ளது இந்தியா.

 

கங்குலிக்கு பின்...

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, அடிலெய்டு மைதானத்தில் 15 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. கடைசியாக 2003ல் இங்கு நடந்த டெஸ்டில் கங்குலி தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

இங்கு, இதுவரை மோதிய 12 டெஸ்டில் ஆஸ்திரேலியா 7 (1948, 67, 78, 92, 99, 2012, 2014), இந்தியா 2 (2003, 2018) போட்டியில் வென்றன. மூன்று டெஸ்ட் (1981, 85, 2008) ‘டிரா’வில் முடிந்தன.

 

முதல் டெஸ்ட்...முதல் வெற்றி

அடிலெய்டில் வென்ற இந்திய அணி, முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றியுடன் துவக்கியது. இதற்கு முன், 11 முறை இங்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இந்திய அணியால் ஒரு முறை கூட முதல் போட்டியில் வென்றதில்லை.

* தவிர ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றியுடன் துவக்கிய 2வது ஆசிய அணி என்ற பெருமை பெற்றது இந்தியா. ஏற்கனவே பாகிஸ்தான் அணி (1978–79, மெல்போர்ன்) இங்கு தொடரை வெற்றியுடன் துவக்கி இருந்தது.

* இதன்மூலம் தென் ஆப்ரிக்கா (இடம்: ஜோகனஸ்பர்க், 2006–07), இங்கிலாந்து (இடம்: லார்ட்ஸ், 1986), நியூசிலாந்து (இடம்: டுனிடினில் 1967–68, ஆக்லாந்தில் 1975–76, ஹாமில்டனில் 2008–09), ஆஸ்திரேலிய (இடம்: அடிலெய்டு, 2018) மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றியுடன் துவக்கிய அணி என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது.

முதல் கேப்டன்

அடிலெய்டு டெஸ்டில் வென்றதன் மூலம், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய மண்ணில் குறைந்தபட்சம் ஒரு டெஸ்டில் வெற்றி தேடித்தந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை பெற்றார் கோஹ்லி. முன்னாள் இந்திய கேப்டன்களான டிராவிட், தோனி ஆகியோர் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க மண்ணில் மட்டும் வெற்றி தேடித்தந்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவில் இவர்களது தலைமையில் இந்திய அணி வென்றதில்லை.

31

அடிலெய்டில் வென்ற (31 ரன் வித்தியாசம்) இந்திய அணி, டெஸ்ட் அரங்கில் குறைந்த ரன் வித்தியாசத்தில் தனது 3வது சிறந்த வெற்றியை பதிவு செய்தது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா (13 ரன், மும்பை, 2004), இங்கிலாந்து (28 ரன், கோல்கட்டா, 1972–73) அணிகளுக்கு எதிராக குறைந்த ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

அஷ்வின் அசத்தல்

‘சுழலில்’ அசத்திய இந்தியாவின் அஷ்வின், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 6 விக்கெட் (86.5 ஓவர், 149 ரன்) கைப்பற்றினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய ஒரு டெஸ்டில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன், 2014ல் நடந்த மெல்போர்ன் டெஸ்டில் 209 ரன் வழங்கி 5 விக்கெட் வீழ்த்தியது இவரது சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

17

டெஸ்ட் அரங்கில், கேப்டன் கோஹ்லி ‘டாஸ்’ வென்ற 20 போட்டிகளில் இந்திய அணி 17ல் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தன. ஜாம்பவான் டான் பிராட்மேன் ‘டாஸ்’ வென்ற 10 டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி ‘டிரா’ ஆனது.

35

அடிலெய்டு டெஸ்டில் 35 விக்கெட்டுகள் ‘கேட்ச்’ முறையில் வீழ்த்தப்பட்டது. இது, டெஸ்ட் வரலாற்றில் 2வது முறையாக நிகழ்ந்தது. இதற்கு முன், இந்த ஆண்டு கேப்டவுனில் நடந்த ஆஸ்திரேலியா–தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய டெஸ்டில் 35 பேர் ‘கேட்ச்’ கொடுத்து ஆட்டமிழந்தனர்.

 

மூலக்கதை