முடங்கியது!நிதி நெருக்கடியால் என்.எஸ்.எஸ்., செயல்பாடு.... புத்துயிர் கொடுக்க அரசின் நடவடிக்கை அவசியம்

தினமலர்  தினமலர்
முடங்கியது!நிதி நெருக்கடியால் என்.எஸ்.எஸ்., செயல்பாடு.... புத்துயிர் கொடுக்க அரசின் நடவடிக்கை அவசியம்

- நமது நிருபர்-நாட்டு நலப்பணித்திட்டம் பொன் விழா கொண்டாடும் வேலையில், இத்திட்டத்தின் செயல்பாடு முடங்கியுள்ளது.கல்வி பயிலும்போதே, மாணவர்கள் சமூக சேவையுடன் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால், 1969ம் ஆண்டு, நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.,) துவக்கப்பட்டது.அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் வீ.கே.ஆர்.வீ ராவ், நாட்டில் உள்ள 37 பல்கலைக்கழகங்களில் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டம் விரிவடைந்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும், 100 மாணவர்கள் வரையில் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு சேவையாற்றி வருகின்றனர். வாரந்தோறும் விடுமுறை நாட்களில், கல்வி நிறுவன வளாகம் மற்றும் சுற்றுப்புற துாய்மை பணிகளை மேற்கொள்வதுடன், ஆண்டுக்கு ஒரு முறை கிராமத்தில் முகாமிட்டு நலப்பணிகளை மேற்கொள்கின்றனர்.தூய்மை பணி மற்றும் மரம் வளர்ப்பு, சமூக பிரச்னைகள் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள் நடத்துதல், போக்குவரத்தை சீரமைத்தல், கோவில் விழாக்களில் கூட்டத்தை சரி செய்தல் உள்ளிட்டவைகளை அவர்களின் முக்கிய பணிகளாக கூறலாம்.மாணவர்கள் வாரந்தோறும் மேற்கொள்ளும் சேவை பணிகளின்போது, டீ மற்றும் ஸ்னாக்ஸ் செலவுக்காக ரூ. 22,500, முகாம் காலத்தில் உணவு மற்றும் தங்கும் செலவுக்காக ரூ. 22,500 மத்திய, மாநில அரசால் வழங்கப்படுகிறது. இதில், மத்திய அரசு 65 சதவீதமும், மாநில அரசு 35 சதவீதமும் வழங்குகிறது.புதுச்சேரியில், 1976ம் ஆண்டு என்.எஸ்.எஸ்., திட்டம் துவக்கப்பட்டது. புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்கள் சேர்த்து, 6 கல்லுாரிகளில் மட்டும் துவக்கப்பட்ட இத்திட்டம், 1986ம் ஆண்டு மேல்நிலை பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.ஒவ்வொரு யூனிட்டிலும் 100 மாணவர்கள் இடம் பெற்றனர். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் திட்ட அதிகாரி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.1986ம் ஆண்டு புதுச்சேரியில் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டபோது, என்.எஸ்.எஸ்., திட்டத்தை செயல்படுத்த மாநில அளவில் இணைப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். முதன்முதலாக நியமிக்கப்பட்ட ரத்ன நடராஜன் மேற்பார்வையில், புதுச்சேரியில் திட்டம் திறம்பட செயல்பட்டது. அவரை தொடர்ந்து, 2001ம் ஆண்டு பொறுப்பேற்ற தாகூர் பல்கலைக்கழக இணை பேராசிரியராக இருந்த ராஜன் காலத்திலும் திட்டம் சிறப்பாக செயல்பட்டது. அப்போது, 6 ஆயிரமாக இருந்த சேவை தொண்டர்கள் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக உயர்நிலை பள்ளி அளவில் என்.எஸ்.எஸ்., யூனிட் துவக்கப்பட்டது. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட 21 கல்லுாரிகள், 80 பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., திட்டம் செயல்படுத்தப்பட்டது.எய்ட்ஸ் தினம், தேசிய ஒருமைப்பாட்டு தினம், ரத்ததான முகாம்கள் மாநில அளவில் நடத்தப்பட்டு வந்தது. மாதம் தோறும் மாணவர்களுக்கு ஆளுமை திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பேரிடர் மேலாண்மை, போக்குவரத்து சீரமைப்பு, வடிகால் சீரமைப்பு உள்ளிட்ட சேவை பணிகளில் ஈடுபட்டனர். குறிப்பாக சுனாமி பாதிப்பின்போது, என்.எஸ்.ஸ்., மாணவர்களின் சேவை மகத்தானதாக இருந்தது.நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடந்த என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்களில் புதுச்சேரி சேவை தொண்டர்கள் பங்கேற்றனர். டில்லியில் நடக்கும் குடியரசு தினம், சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்து வந்தனர்.தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு விருதுகளை என்.எஸ்.எஸ்., மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றனர்.இந்நிலையில், 2012ம் ஆண்டிற்கு பிறகு, என்.எஸ்.எஸ்., சேவையின் ஓராண்டு பணிகள் குறித்த ஆண்டறிக்கை கூட வெளியிடப்படவில்லை. மத்திய அரசிடமிருந்து பெறப்படும் நிதிக்கும் முறையாக கணக்கு சமர்ப்பிக்காததால், அந்த நிதியை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், வாரந்தோறும் நடக்கும் சேவைப்பணிகள் மற்றும் கிராம நலப்பணி முகாம்கள் நடத்த நிதிக்கு போராட வேண்டியுள்ளது.பணம் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த பணத்தை செலவிட்டு, பள்ளி திட்ட அதிகாரிகள் முகாம்களை நடத்திவிட்டு, தொகைக்கான காத்திருக்கின்றனர். இதனால், புதுச்சேரியில் என்.எஸ்.எஸ்., செயல்பாடு முற்றிலும் முடங்கியுள்ளது. ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன்.எனவே, பொன்விழா கொண்டாடும் என்.எஸ்.எஸ்., திட்டத்திற்கு புதுச்சேரியில் மீண்டும் புத்துயிர் கொடுக்க அரசு முன்வர வேண்டும்.


மூலக்கதை