ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா: சொந்த காரணங்களுக்காக விலகுவதாக கடிதம்

தினகரன்  தினகரன்
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா: சொந்த காரணங்களுக்காக விலகுவதாக கடிதம்

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை உர்ஜித் படேல் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். தன்னுடைய ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருவதாக அறிக்கை ஒன்றில் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். இது மிகுந்த பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய உள்ளதாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தகவல்கள் வெளிவந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சமாளிப்பது, பொதுத்துறை வங்கிகளை முறைப்படுத்துவது, வட்டி நிர்ணயம் உள்ளிட்ட 6 பிரச்னைகளில் மத்திய அரசு ரிசர்வ் வங்கி இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7வது பிரிவை பயன்படுத்தி  பொது மக்கள் நலன் அடிப்படையில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்த வகை செய்கிறது. சிறப்புரிமையாக இதை மத்திய அரசு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. புகைந்து கொண்டிருந்த இந்த மோதல் விவகாரத்தை வெட்ட வெளிச்சமாக்கியவர் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யாதான். ‘‘ரிசர்வ் வங்கியின் முடிவுகள், செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுகிறது. ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மத்திய அரசு மதிப்பதில்லை’’ என்று அவர் தெரிவித்தார்.மேலும், ரிசர்வ் வங்கியின் கூடுதல் கையிருப்பு தொகையான ரூ.3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்பதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில் ரிசர்வ் வங்கி, மத்தியஅரசு  இடையே மோதல் ஏற்பட்ட விஷயங்களில் சுமுகத் தீர்வு காண குழுக்கள் ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் பிரச்னைகள் முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், நேற்று மாலை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், ‘‘சொந்த காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி கவர்னர்  பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்தேன், இந்த ராஜினாமா  உடனடியாக அமலுக்கு வருகிறது. ரிசர்வ் வங்கியின் கவுரவமிக்க கவர்னர் பதவியை  கடந்த ஆண்டுகளில் வகித்ததை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்’’ என்று கூறியுள்ளார். மத்திய அரசுடன்மோதல் போக் குக்கு பிறகு ரகுராம் ராஜன்ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து 2016 நவம்பர் 4ம்தேதி விலகினார். இதையடுத்து உர்ஜித் படேல் 24வது கவர்னராக பதவியேற்றார். உர்ஜித் படேலின் ராஜினாமாவுக்கு பின்னணியில், மத்திய அரசின்  நிர்பந்தம் இருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இதை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால், பதவி விலகிய உர்ஜித் படேலின் சிறப்பான பணிகளை பிரதமர் மோடியும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் பாராட்டி உள்ளனர்.தொடரும் மோதல்கள்ஏற்கனவே, ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் இருந்தபோதே, அவருக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. குறிப்பாக வட்டி விகிதத்தை குறைப்பதில் ரகுராம் ராஜன் கெடுபிடி காட்டியது மத்திய அரசை எரிச்சலடைய செய்தது. வட்டி குறைப்பு, வராக்கடன் சுமையால் தவிக்கும் வங்கிகளுக்கு கடன்மறுப்பு உள்ளிட்ட விஷயங்களை மத்திய அரசின் பரிந்துரையை ரிசர்வ் வங்கி நிராகரித்து வந்தது. வராக்கடனுக்கு ரிசர்வ் வங்கிதான் காரணம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டியிருந்தார். அதோடு, கடந்த 2008-2014 இடையே வங்கிகள் மிக தாராளமாக கடன் வழங்கியதை ரிசர்வ் வங்கி தடுக்காததுதான் கடன் சுமைக்கு காரணம் எனவும் கூறியிருந்தார். ரகுராம் ராஜனுக்கு பிறகு உர்ஜித் படேல் 24வது கவர்னரானார். இவர் கென்யாவில் பிறந்தவர். இவரது பெற்றோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி இவரை மத்திய அரசு பதவியில் அமர்த்தியபோது, குஜராத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த பதவி கிடைத்ததாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனாலும் மோதல் போக்கு தொடர்ந்தது.

மூலக்கதை