பா.ஜ., போராட்டத்தில் போலீஸ் தடியடி திருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு

தினகரன்  தினகரன்
பா.ஜ., போராட்டத்தில் போலீஸ் தடியடி திருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் தொடர்பாக திருவனந்தபுரத்தில் நேற்று போராட்டம் நடத்திய பா.ஜ., தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து திருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. சபரிமலையில் போலீஸ் தடை உத்தரவு மற்றும் போலீஸ் கெடுபிடியை நீக்கக் கோரி பாஜ மாநில பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் கடந்த 3ம் தேதி முதல் திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். நேற்று 8வது நாளாக போராட்டம் நடந்தது. இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க கோரி நேற்று பாஜ மற்றும் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா தொண்டர்கள் தலைமை செயலகம் நோக்கி கண்டன பேரணி நடத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது திடீர் என்று போலீசார் மீது கற்கள் வீசப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை கலைத்தனர். இதனால் தலைமை செயலகம் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. கல்வீச்சு மற்றும் தடியடியில் 8 பா.ஜ., பெண் தொண்டர்கள், 3 போலீசார் உட்பட 15 பேர் காயமடைந்தனர். தடியடியை கண்டித்து போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் ேலசான தடியடி நடத்தி விரட்டினர். இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி ேநரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து இன்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பா.ஜ., அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் 8வது நாளாக நேற்று பாஜ மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார். உடல்நிலை மோசமடைந்ததால், அவரை கைது செய்து ஆம்புலன்ஸ்மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்தார்.

மூலக்கதை