தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு ஸ்டெர்லைட் வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு

தினகரன்  தினகரன்
தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு ஸ்டெர்லைட் வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு

புதுடெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வழங்குவதாக நேற்று உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இதையடுத்து ஆலை பகுதியை ஆய்வு செய்ய உருவாகப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழு ஆலையை திறக்கலாம் என பரிந்துரை செய்தது. இதற்கு வேதாந்தா நிறுவனம் மற்றும் தமிழக அரசு ஆகியோர் கடந்த 7ம் தேதி பதில் மனுவை தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கு டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.அதன்படி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் ஏகே.கோயல் அமர்வில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சிஎஸ்.வைத்தியநாதன் “ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியை சுற்றி நிலத்தடி நீரானது கடும் மாசடைந்துள்ளது. ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் பொருட்களால் மக்களுக்கு தோல் நோய்கள், கேன்சர் உருவாகிறது. ஸ்டெர்லைட் ஆலையால் சுமார் 1லட்சத்து 60ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. இதுபற்றி ஓய்வு நீதிபதி தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்புக் குழு சரியான ஆய்வை மேற்கொள்ள தவறிவிட்டது.  தவறான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சிறப்புக் குழுவின் அறிக்கை அறிவியல் பூர்வமானது கிடையாது என உறுதியாகியுள்ளது. எனவே ஆலையை மீண்டும் திறக்க தீர்ப்பாயம் கண்டிப்பாக அனுமதி வழங்கக் கூடாது என வாதிட்டார். இதற்கு வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் “ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வெளியிடப்படும்” என உத்தரவிட்டார். வைகோ 25 நிமிடம் வாதம்: இந்த வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாதிடுவதற்கு 25 நிமிடம் அவகாசம் அளிக்கப்பட்டது. அப்ேபாது அவர், ‘ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தீர்ப்பாயம் ஆரம்பத்தில் இருந்தே ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. இதில் எந்த வகையான தீர்ப்பை நீங்கள் வழங்குவீர்கள் என்பது எனக்கு தெளிவாக தெரியும். மக்களுக்கு ஆதரவான உத்தரவு இதில் வர வாய்ப்பில்லை. மக்களின் உயிரோடு விளையாடும் ஸ்டெர்லைட் ஆலையை மூட தயக்கம் காட்டுவது ஏன் என வாதிட்டார். இதையடுத்து நிருபர்களிடம் அவர் கூறுகையில்,”ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயங்க வைக்கும் முயற்சியில் அதிமுகவிற்கும் பங்கு உண்டு” என கூறினார்.

மூலக்கதை