சபரிமலையில் 144 தடையை நீக்ககோரி கேரள பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி

தினகரன்  தினகரன்
சபரிமலையில் 144 தடையை நீக்ககோரி கேரள பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி

திருவனந்தபுரம் : சபரிமலையில் 144 தடை உத்தரவை நீக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டதையடுத்து, நேற்று 6வது நாளாக அவை ஒத்தி வைக்கப்பட்டது. கேரள சட்டப்பேரவை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. 7 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் சபரிமலை விவகாரத்தால் 5 நாட்களிலும் கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே சபரிமலையில் 144 தடை உத்தரவு மற்றும் போலீஸ் கெடுபிடிகளை நீக்கக்கோரி, காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சட்டப்பேரவை வளாகத்தில் தொடர் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில் நேற்று காலை 6வது நாளாக சட்டப்பேரவை கூடியது. கேள்வி நேரம் தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேனர்களுடன் அவையின் மையப் பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள், சபரிமலையில் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும், போலீஸ் கெடுபிடியை தளர்த்த வேண்டும், எதிர்கட்சி எம்எல்ஏக்களின் சத்யாகிரக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோஷமிட்டபடி சபாநாயகர் இருக்கை முன் திரண்டனர். கேள்வி நேரத்தில் இடையூறு செய்யக்கூடாது என்று சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் எதிர்கட்சி உறுப்பினர்களிடம் கூறினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடரவே சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், 6வது நாளாக அவையை ஒத்திவைத்தார்.

மூலக்கதை