ஆந்திராவில் பன்றிக்காய்ச்சல் பீதியால் ஒரு கிராமத்தையே புறக்கணிக்கும் சுற்றுவட்டார மக்கள்

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் பன்றிக்காய்ச்சல் பீதியால் ஒரு கிராமத்தையே புறக்கணிக்கும் சுற்றுவட்டார மக்கள்

திருமலை: ஆந்திராவில் பன்றிக்காய்ச்சல் பீதியால் சுற்றவட்டார கிராம மக்கள் ஒரு கிராமத்தையே புறக்கணித்து வருகின்றனர். அதில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பஸ்சில் சென்றால் மற்ற பயணிகள் அவர்களை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிடும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.ஆந்திராவின் கோடூரு மண்டலத்தில் சிந்தகோலா என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த நாச்சாரய்யா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பன்றிக் காய்ச்சல் காரணமாக இறந்தார்.  நேற்று முன்தினம் அதே ஊரைச் சேர்ந்த மாரியம்மாவும் திடீரென இறந்தார். இதனால் சிந்தகோலா சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மற்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அந்த ஊரில் இருக்கும் அனைவருக்கும் பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று பயந்து, சிந்தகோலா கிராமத்தை முழுவதுமாக புறக்கணித்துள்ளனர். இதனால் அருகில் இருக்கும் மற்ற கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கு அறிவிக்கப்படாத விடுமுறை விடப்பட்டு  சிந்தகோலா கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிந்தகோலா கிராமத்துக்கு மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வரும் வேன் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. பால் விநியோகம் செய்பவர்களும் கடந்த இரண்டு நாட்களாக வரவில்லை. இதனால் சிந்தகோலா கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு பால் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் பேருந்துகளில் சிந்தகோலா மக்கள் ஏறினால் அவர்களை பேருந்தில் இருந்து வலுகட்டாயமாக  மற்ற பயணிகள்  கீழே இறக்கி விடுகின்றனர். எனவே, பன்றிக்காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும், மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கவும் சிந்தகோலா கிராமத்தில் அதிகாரிகள் மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை நடத்தி வருகின்றனர்.  பன்றிக்காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதில் எந்த பயனும்   கிடைக்கவில்லை. இதனால்  சிந்தகோலா கிராம சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மற்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை சமாளிக்க வழி தெரியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

மூலக்கதை