ராஜிவ்காந்தி கொலை வழக்கு விவகாரம் 7 பேரை விடுதலை செய்ய முடிவா? : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு

தினகரன்  தினகரன்
ராஜிவ்காந்தி கொலை வழக்கு விவகாரம் 7 பேரை விடுதலை செய்ய முடிவா? : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு

புதுடெல்லி :   ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை காலாவதி ஆகிவிட்டதாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்யலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அந்த கடிதம் தொடர்பாக இதுவரை அவரது தரப்பில் இருந்து எந்த பதிலும், விளக்கமும் வழங்கப்படவில்லை.இதையடுத்து இந்த விவகாரத்தில் ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தியும், தமிழக கவர்னர் விரைந்து தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலகர்கள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் உட்பட உலக நாடுகளில் இருந்தும் ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தொடர்ந்து கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கடந்த வாரம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது மேகதாது அணை, கஜா புயல், ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியது.இந்த நிலையில் மேற்கண்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.அதில்,” 7 பேர் விடுதலை தொடர்பாக எந்த ஒரு மனுவும் மத்திய அரசிடம் நிலுவையில் கிடையாது. இதுகுறித்து ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழக அரசுக்கு கடந்த ஏப்ரம் மாதமே பதில் அறிக்கை அனுப்பப்பட்டு விட்டது. இதில் ராஜிவ்காந்தி கொலையின் போது அப்பாஸ் உள்ளிட்ட பாதிக்கப்பட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு தற்போது காலாவதியாக விட்டது. இதனை நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் 7 பேர் விடுதலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மூலக்கதை