உலக கோப்பை ஆடவர் ஹாக்கி கிராஸ்ஓவரில் இன்று இங்கிலாந்து-நியூசிலாந்து மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக கோப்பை ஆடவர் ஹாக்கி கிராஸ்ஓவரில் இன்று இங்கிலாந்துநியூசிலாந்து மோதல்

புவனேஸ்வர்:  உலக கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரில் இன்று நடைபெறும் கிராஸ்ஓவர் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. மற்றொரு கிராஸ்ஓவரில் வலுவான பிரான்ஸ் அணியை, சீன அணி எதிர்கொள்கிறது.

நேற்று நடந்த போட்டியில் மலேசியாவை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் காலிறுதிக்கு நேரடியாக ஜெர்மனி தகுதி பெற்றது. உலக கோப்பை ஆடவர் 2018 ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகின்றன.

இதில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய அணிகள், தங்களது பிரிவில் முதலிடத்தை பிடித்து நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன.
நேற்று நடந்த டி பிரிவு லீக் ஆட்டங்களில் முதல் போட்டியில் ஜெர்மனி - மலேசிய அணிகள் மோதின. ஜெர்மனி வீரர் டிம் ஹெர்ஸ்ப்ருச் ஆட்டம் துவங்கிய 2வது நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து ஜான் கிறிஸ்டோபர் ருஹர் 14வது மற்றும் 16வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடிக்க, ஜெர்மனி 3-0 என முன்னிலை பெற்றது.

இருப்பினும் மலேசிய வீரர்களும் சளைக்காமல் போராடினர். அந்த அணியின் முகமது அப்துல் ரகிம் 25வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.

அடுத்து நபில் நூர் 28வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை வீணாக்காமல் கோல் அடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெர்மனி வீரர்கள் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தினர். 39வது நிமிடத்தில் ஜெர்மனியின் மார்கோ மிக்காவ், அழகாக பந்தை கடத்திச் சென்று கோல் அடித்தார்.

விடாப்பிடியாக துரத்திய மலேசிய அணியின் அப்துல் ரகீம், 42வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்க, ஆட்டம் மேலும் சூடு பிடித்தது. எனினும், 59வது நிமிடத்தில் டிம் ஹெர்ஸ்ப்ருச் மீண்டும் அடித்த கோல் மூலம் ஜெர்மனி 5-3 என்ற கணக்கில் இப்போட்டியில் வென்றது.

இதன் மூலம் 9 புள்ளிகளுடன் டி பிரிவில் இருந்து நேரடியாக ஜெர்மனி காலிறுதிக்கு முன்னேறியது. மலேசிய அணி, இந்த தோல்வியால் காலிறுதிக்கு தகுதி பெறாமல், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

டி பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து 5-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது.

இந்த பிரிவில் நெதர்லாந்து (6), பாகிஸ்தான் (1) அணிகள் கிராஸ் ஓவர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இன்றும், நாளையும் கிராஸ்ஓவர் போட்டிகள் நடைபெற உள்ளன. இன்று மாலை 4. 45 மணிக்கு துவங்கும்  முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இதில் வெற்றி பெறும் அணி, காலிறுதியில் அர்ஜென்டினாவை எதிர்த்து களமிறங்கும். இன்று இரவு 7மணிக்கு துவங்கும் மற்றொரு கிராஸ்ஓவர் போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியுடன், சீனா மோதவுள்ளது.

இதில் வெற்றி பெறும் அணி, காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து மோதும்.

டிச. 12 மற்றும் 13ம் தேதிகளில் காலிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன.

.

மூலக்கதை