புரோ கபடி லீக் தமிழ் தலைவாஸை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
புரோ கபடி லீக் தமிழ் தலைவாஸை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

புரோ கபடி லீக் 6வது தொடரில் நேற்று நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை, ஜெய்ப்பூர்  பிங்க் பாந்தர்ஸ் அணி 37-24 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது. விசாகபட்டினத்தில் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

துவக்கம் முதலே இப்போட்டியில் ஜெய்ப்பூர் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
அந்த அணியின் சுனில் சித்தகாவலியின் தடுப்பு வியூகங்களை மீறி, தமிழக வீரர்களால் முன்னேற முடியவில்லை.

இருப்பினும் ஆட்டம் துவங்கிய முதல் 11 நிமிடங்களில் இரு அணிகளும் 7-7 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தன. 14வது நிமிடத்தில் ஆனந்த் பட்டீலின் ரெய்டில், ஜெய்ப்பூர் அணிக்கு கூடுதலாக 2 புள்ளிகள் கிடைத்தன.

தொடர்ந்து தீபக் ஹூடாவின் சிறப்பான துரத்தலால் ஆட்டத்தின் 16வது நிமிடத்திலேயே 16-9 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணி முன்னிலை பெற்றது.

இப்போட்டியில் தீபக் ஹூடா மட்டுமே 9 புள்ளிகளை எடுத்தார். மற்றொரு வீரர் ஆனந்த் பட்டீல் 5 புள்ளிகள் எடுத்தார்.

ஆட்டத்தின் கடைசி 5 நிமிடங்களில் நம்ப முடியாத அளவிற்கு ஆதிக்கம் செலுத்தினர் ஜெய்ப்பூர் வீரர்கள். அவர்களது அசத்தலான ஆட்டத்தால் இப்போட்டியில் 37-24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி ஜெய்ப்பூர் வசமானது.

இந்த தொடரின் 15 போட்டிகளில் ஆடியுள்ள ஜெய்ப்பூர் அணிக்கு இது 4வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மு்லம் அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

18 போட்டிகளில் ஆடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி, அவற்றில் 11 தோல்விகளை சந்தித்துள்ளதால், பிளே-ஆஃப் சுற்றில் தகுதி பெற, மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றேயாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நேற்று நடந்த மற்றொரு பரபரப்பான போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணி 35-31 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் அந்த அணி, பி பிரிவு புள்ளி பட்டியலில் 44 பாயின்ட் எடுத்து 3வது இடத்தை பிடித்துள்ளது.

இப்பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி, 34 பாயின்ட்டுகளுடன் 5ம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை