சுதேசி மில் காட்டுப்பகுதியை மக்கள் பார்வையிட அனுமதி

தினகரன்  தினகரன்
சுதேசி மில் காட்டுப்பகுதியை மக்கள் பார்வையிட அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடி தினமும் ஒரு அரசு துறைகளில்  ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று சுதேசி மில் வளாகத்தில் உள்ள  23 ஏக்கர் பரப்பளவிலான காட்டுப்பகுதியை பார்வையிட்டார். 3 கிலோ மீட்டர்  தூரம் காட்டின் உள்பகுதிக்கு நடந்து சென்று, அங்கு பாதுகாக்கப்பட்டு வரும்  மரம், செடிகள், வசிக்கும் விலங்குகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது  காட்டின் மையப்பகுதியில் உள்ள 200 ஆண்டுகாலம் பழமையான 14 மீட்டர் சுற்றளவு  கொண்ட மிகப்பெரிய பேயபாப்( யானை) மரத்தினை பார்த்து வியந்தார். இது  குறித்த தகவல்களை வனக்காப்பாளர் குமார், அவரிடம் கூறுகையில், மடகாஸ்கர்,  ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஆரேபியா ஆகிய நாடுகளில் வளரும், இந்த மரம்  ஆப்ரிக்காவில் இருந்து பிரெஞ்சுக்காரர்கள் கொண்டுவந்ததாக தெரிவித்தார். இது  அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய பட்டியலில் வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது  என்றும் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான காட்டு வவ்வால்கள் அங்கிருக்கும் மரக்கிளைகளில்  தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது. இது பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக  இருந்தது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதிகளை பார்வையிடுவதற்கு  பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். திங்கட்கிழமை தவிர்த்து மீதமுள்ள  அனைத்து நாட்களிலும் வனத்துறையின் அனுமதி பெற்று பார்க்கலாம். இங்கு   மீட்கப்பட்ட விலங்குகள், ஊர்வன, பறவைகள், மான்கள், மிகவும் அரிதான  பட்டாம்பூச்சி இனங்களையும் காணமுடியும். இந்த இடம் அனைவரையும் கவர்வதோடு,  மாணவர்களுக்கு சூழலியல் குறித்து கல்வியை போதிக்கும் இடமாக இருப்பதாக  கிரண்பேடி தெரிவித்தார்.

மூலக்கதை