மீ டூ பற்றி வெளிப்படையாக பேசுங்கள் : சின்மயி

தினமலர்  தினமலர்
மீ டூ பற்றி வெளிப்படையாக பேசுங்கள் : சின்மயி

மீ டூ வாயிலாக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி தமிழ் சினிமாவில் பரபரப்பை கிளப்பியவர் பாடகி சின்மயி. இதையடுத்து பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை மீ டூ வாயிலாக சொல்ல ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பேஸ்புக் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார் சின்மயி. அவர் கூறுகையில், மீ டூ ஆரம்பித்து வைத்தது நான் கிடையாது. முதன்முதலில் ராய சர்கார் என்பவர் தான் இந்தியாவில் இந்த இயக்கத்தை முன்னெடுத்தார். பிறகு பத்திரிகையாளர் சந்தியா மேனன் முன் வந்து பேசினார். அவரிடம் என்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் எனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறினேன்.

மீ டூ எனக்கு மட்டும் நடந்தது கிடையாது. பள்ளி, கல்லூரி, அடுக்குமாடி குடியிருப்பு என எல்லா இடங்களிலும் நடக்கிறது. சமீபத்தில் காது கேட், வாய் பேச முடியாத சிறுமியை 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். இப்படிப்பட்ட சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம். பாலியல் கொடுமை நடந்தால் மூடி மறைக்காதீர்கள். இதில் வெட்கப்பட வேண்டியது பெண்கள் கிடையாது, குற்றவாளிகளே.

பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறது. நிறைய ஆண்கள் என்னிடம் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லியிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களை விடுத்து, பாதிப்புக்கு உள்ளாக்கியவர்களை பலப்படுத்தவே இந்த சமூகம் முற்படுகிறது.

என்னை நிறையபேர் திட்டுகிறார்கள். தமிழில் இருக்கும் எல்லா கெட்ட வார்த்தைகளையும் சொல்லி வசைபாடினார்கள். தமிழில் இவ்வளவு கெட்டவார்த்தைகள் இருக்கிறது என தெரிந்து கொண்டேன். என்னை திட்டியவர்களுக்கு நன்றி. பிறப்புறப்பு பற்றியெல்லாம் சொல்லி திட்டினார்கள். ஆரம்பத்தில் வலித்தது. பிறகு என்னை திடப்படுத்தி கொண்டேன். நான் ஒரு பெண், எனக்கு இருக்கிறது, இதை எதற்கு அவமானமாக கருத வேண்டும். இப்படியொரு மன தைரியத்தை கொடுத்தவர்களுக்கு நன்றி.

என்னை நீ யோக்கியமானவளா, உத்தமியா என்றெல்லாம் கேட்கிறார்கள். என்னை பாலியல் தொழிலாளி என கூறுகிறார்கள். இதற்காக நான் வெட்கி தலை குணிய மாட்டேன். இந்த உலகத்திலேயே ஆண்களுக்காக மட்டுமே வாழும் ஒரு தொழில் பாலியல் தொழில் மட்டுமே. பாலியல் தொழில் செய்பவர்கள் திருந்தி வந்தால் நீங்கள் சமூகத்தில் இடமா கொடுக்க போகிறீர்கள்?

வீட்டு பெண்கள் பாலியல் புகார் சொன்னால் வேலைக்கு போகாதே, படிக்க போகாதே என்று சொல்லி வீட்டிற்குள் பூட்டி வைக்காதீர்கள். தவறு செய்தவர்களை திருத்துங்கள். பாலியல் வன்கொடுமை பற்றி வெளிப்படையாக பேசுங்கள். ஆண்களும் நம்பை புரிந்து கொள்வார்கள். சமூகம் அதற்கான மாற்றம் கண்டு வருகிறது.

மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் உறவு கொண்டால் தவறு என பேசும் அளவுக்கு சமூகத்தில் மாற்றம் வந்திருக்கிறது. இன்னும் மாற வேண்டும். ஆகவே வெளிப்படையாக பேசுங்கள், வெட்கப்பட ஒன்றுமில்லை. இன்று பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும், விரைவில் மாற்றம் வரும்.

இவ்வாறு சின்மயி கூறினார்.

மூலக்கதை