20வது வருடத்தில் 'சேது'

தினமலர்  தினமலர்
20வது வருடத்தில் சேது

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் பல போராட்டங்களுக்குப் பிறகு வெளிவந்துள்ளன. அவற்றில் சில படங்கள் மட்டுமே மறக்க முடியாத சரித்திரப் படங்களாக அமைந்தன. அவற்றில் 1999ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த 'சேது' படம் முக்கியமான ஒரு படம்.

பாலா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விக்ரம், அபிதா மற்றும் பலர் நடித்த இந்தப் படம் வியாபாரத்திற்காக மட்டும் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் 100 முறை போட்டுக் காட்டப்பட்டது. அதன்பிறகுதான் படம் வெளிவந்தது. ஆனாலும், பல தியேட்டர்களில் ஓரிரு நாட்களில் படத்தை தூக்கிவிட்டார்கள்.

டிவிக்களில் படத்தைப் பற்றிய விமர்சனங்களும், பாடல்களும் வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், எந்த தியேட்டர்களில் படத்தைத் தூக்கினார்களோ, அவர்களே மீண்டும் படத்தைத் திரையிட்டார்கள். விக்ரம் என்ற நடிகர் மறு அவதாரம் எடுக்கவும், பாலா என்ற இயக்குனர் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கவும் காரணமாக அமைந்த படம் 'சேது'.

1997ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட 'சேது' படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து பின்னர் நிறுத்தப்பட்டது. அப்போது அந்தப் படத்தில் உதவி இயக்குனராகவும், பாலாவின் நெருங்கிய நண்பராகவும் இருந்த அமீர், தயாரிப்பாளரைச் சந்தித்துப் பேசி மீண்டும் படம் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தார். 1998ம் ஆண்டு மீண்டும் ஆரம்பமான படம் 1999ம் ஆண்டு ஜுன் மாதம் நிறைவுற்று, டிசம்பர் 10ம் தேதி வெளிவந்தது.

1999ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற பெருமை 'சேது' படத்திற்கு உண்டு. இப்போதும் அப்படத்தில் இடம் பெற்ற 'எங்கே செல்லும் இந்த பாதை' பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவின் சிறந்த படங்களைப் பட்டியலிட்டால் அதில் 'சேது' படத்திற்கும் நிச்சயம் இடமிருக்கும்.

மூலக்கதை