பேட்ட விழா, ரஜினி அரசியல் பேசாதது ஏன் ?

தினமலர்  தினமலர்
பேட்ட விழா, ரஜினி அரசியல் பேசாதது ஏன் ?

ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'பேட்ட'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொள்ள சென்னையில் நடைபெற்றது.

விழாவில் வழக்கம் போல ரஜினிகாந்த் பேச்சு பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் எந்தவிதமான அரசியல் கருத்துக்களையும் கூறாமல் கஜா நிவாரண உதவிகளைப் பற்றி மட்டுமே படத்தைத் தவிர்த்துப் பேசினார்.

'எக்ஸ்ட்ரா'வாக எதுவும் இருக்கக் கூடாது, அப்படி இல்லாமல் இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்ற கருத்தை மட்டுமே அவர் எக்ஸ்ட்ராவாகப் பேசினார். ஆக, ரஜினிக்கே அரசியல் பற்றி பேசினால் அது எக்ஸ்ட்ரா பேச்சாக இருந்திருக்கம் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ரஜினி அரசியல் பேசாததற்கு காரணம் என்ன என்று கோலிவுட்டில் ஒரு பரபரப்பு உண்டாகி வருகிறது. ரஜினிகாந்தின் அரசியல் பேச்சுக்களால் தான் தமிழ்நாட்டில் 2.0 படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற ஒரு தகவல் உண்டு. அதனால், 'பேட்ட' படத்தைத் தயாரித்துள்ள, நிறுவனம் ரஜினியிடம் படம் தவிர வேறு எதுவும் பேச வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் இருக்கிறது. அப்படி அவர் ஏதாவது அரசியல் பேசி, இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளிவர உள்ள படத்தை பாதித்து விடப் போகிறது என்று கேட்டுக் கொண்டார்களாம். அதை மனதில் வைத்து தான் ரஜினிகாந்த் நேற்றைய விழாவில் அரசியல் பேசவில்லை என்கிறார்கள்.

மூலக்கதை