கடுமையாக போராடி முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி!

PARIS TAMIL  PARIS TAMIL
கடுமையாக போராடி முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
 
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலை வகிக்கின்றது.
 
எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக அடிலெய்ட் மைதானத்தில் கடந்த 06ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸிற்காக 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
 
இதன்போது, அணியின் அதிகபட்ச ஓட்டமாக புஜாரா 123 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ஜோஸ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், நதன் லியோன், மிட்செல் ஸ்டாக், பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி 235 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக, ட்ராவிஸ் ஹெட் 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், இசாந் சர்மா, மொஹமட் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
15 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸிற்காக 307 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதற்கமைய இந்தியா அணி, அவுஸ்ரேலியா அணிக்கு 323 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
 
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக புஜாரா 71 ஓட்டங்களையும், ரஹானே 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் நதன் லியோன் 6 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
இதனைதொடர்ந்து, 323 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 291 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா அணி 31 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
 
இதன்போது அவுஸ்ரேலியா அணி சார்பில், அதிகபட்ச ஓட்டமாக ஷோன் மார்ஷ் 60 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் பும்ரா, அஸ்வின், ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
இப்போட்டியின் ஆட்ட நாயகான இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் புஜாரா, தெரிவுசெய்யப்பட்டார்.
 
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 14ஆம் திகதி பெர்த் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மூலக்கதை