தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர் முதலிடம்:இந்தாண்டு 8,000 கோடி டாலரை எட்டும்: உலக வங்கி கணிப்பு

தினமலர்  தினமலர்
தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர் முதலிடம்:இந்தாண்டு 8,000 கோடி டாலரை எட்டும்: உலக வங்கி கணிப்பு

புதுடில்லி:வெளிநாடுகளில் உள்ளோர், தாயகத்திற்கு பணம் அனுப்புவதில், இந்தாண்டும், இந்தியா முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என, உலக வங்கி தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் பணியாற்றுவோர், தாங்கள் பிறந்த நாட்டில் உள்ள குடும்பத்திற்கு பணம் அனுப்புகின்றனர். அத்தகையோரில், இந்தியர்கள் தான் அதிக தொகையை தாயகத்திற்கு அனுப்பி, முதலிடத்தில் இருந்து வருகின்றனர்.இந்தாண்டு நிலவரம் குறித்து, உலக வங்கியின்அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வெளிநாடுகளில் உள்ளோர், தாயகத்திற்கு அதிக பணம் அனுப்புவதில், இந்தாண்டும், இந்தியர்கள் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்வர்.அவர்கள் மூலம், இந்தியாவுக்கு, 8,000 கோடி டாலர் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இந்த வகையில், வளரும் நாடுகளுக்கு அனுப்பும் பணம், 10.8 சதவீதம் உயர்ந்து, 52,800 கோடி டாலராக உயரும். இது, புதிய சாதனையாக இருக்கும்.

கடந்த ஆண்டு, இந்த வளர்ச்சி, 7.8 சதவீதமாக இருந்தது.வளர்ந்த நாடுகள் உட்பட, சர்வதேச அளவில் அனுப்பப்படும் தொகை, 10.3 சதவீதம் உயர்ந்து, 68,900 கோடி டாலராக அதிகரிக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள், தாயகத்திற்கு அனுப்பும் தொகை அதிகரித்து வருகிறது.

தெற்காசிய நாடுகள்

இந்த வகையில் இந்தியா, 2016ல், 6,270 கோடி டாலர் ஈர்த்தது. இது, 2017ல், 6,530 கோடி டாலராக உயர்ந்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இது, 2.7 சதவீதமாகும்.இந்தாண்டு, தெற்காசிய நாடுகள் ஈர்க்கும் தொகை, 13.5 சதவீதம் உயர்ந்து, 13,200 கோடி டாலராக உயரும். இந்த வளர்ச்சி, 2017ல், 5.7 சதவீதமாக இருந்தது.இந்த வளர்ச்சி, முன்னேறிய நாடுகள், குறிப்பாக, அமெரிக்காவின் பொருளாதாரம் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருவதால் சாத்தியமாகியுள்ளது.

மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, வளைகுடா கூட்டுறவு நாடுகள் சிலவற்றில் இருந்தும், வெளிநாடுகளுக்கு அதிக அளவில் பணம் சென்றுள்ளது.இதில், ஜனவரி – ஜூன் வரையிலான காலத்தில், ஐக்கிய அரபு எமிரெட்ஸ், 13 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.எனினும், 2019ல், தெற்காசிய பிராந்தியத்திற்கு பணம் அனுப்புவது குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு, முன்னேறிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மிதமாக இருக்கும் என்பதும், வளைகுடா கூட்டுறவு நாடுகளுக்கு பணியாற்றச் செல்வோர் எண்ணிக்கை குறையும் என்ற மதிப்பீடும் காரணமாக இருக்கும்.அதனால், சர்வதேச அளவில், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகள், அவற்றின் மண்ணின் மைந்தர்கள் மூலம், வெளிநாடுகளில் இருந்து பெறும் தொகை, 4 சதவீத வளர்ச்சியுடன், 54,900 கோடி டாலராக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.உலக நாடுகளின் ஒட்டுமொத்த பண ஈர்ப்பு, 3.7 சதவீத வளர்ச்சியுடன், 71,500 கோடி டாலராக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகரிப்பு

இந்தாண்டு, ஜூலை – செப்டம்பரில், வெளிநாடுகளில் பணியாற்றும் அன்னியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது, 6.9 சதவீதம் அதிகரித்துள்ளது. அவர்கள், சராசரியாக, 200 டாலர் அனுப்பியுள்ளதாக, மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக வங்கி

மூலக்கதை