ஸ்டெர்லைட் வழக்கில் அகர்வால் குழுவின் பரிந்துரைக்கு எதிரான பதில் அறிக்கை: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தாக்கல்

தினகரன்  தினகரன்
ஸ்டெர்லைட் வழக்கில் அகர்வால் குழுவின் பரிந்துரைக்கு எதிரான பதில் அறிக்கை: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தாக்கல்

புதுடெல்லி: ஸ்டெர்லைட் வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அகர்வால் குழுவின் அறிக்கைக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்ற விசாரணையின்போது அகர்வால் குழு தாங்கள் ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்திருந்தனர். அதில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவானது இயற்கை நியதிக்கு எதிரானது. ஏனெனில் இவ்விவாகரம் தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலையின் வாதத்தை கேட்காமலேயே ஆலையை மூடும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. எனவே தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சில நிபந்தனைகளுடன் உத்தரவிடலாம் என பரிந்துரை வழங்கியிருந்தது. இதனையடுத்து, இதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று(12.06.2018) அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று தமிழக அரசு சார்பில் விரிவான அறிக்கை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஸ்டெர்லைட் ஆலைப் பகுதியில் முழுமையான ஆய்வு செய்து அனைத்து தரவுகள், தகவலின் அடிப்படையிலேயே ஆலையை மூட தமிழக அரசு சார்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கையே தாக்கல் செய்திருக்க முடியாது. ஏனெனில், தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்திருக்கலாம். அதேபோல ஆலைக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பான உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்தது. அதனை எதிர்த்து மினாசார வாரியத்தில் உள்ள மேல்முறையீட்டு மன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருக்கலாம். ஆனால் இந்த இரண்டு வழிகளையும் விட்டுவிட்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கையே தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்திருக்க கூடாது என தமிழக அரசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், தமிழக அரசு முன்வைத்த வாதங்களை தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட அகர்வால் குழுவானது பரிசீலனை செய்யவில்லை என்றும், இது ஒருதலைப்பட்சமான அறிக்கையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அகர்வால் குழுவின் அறிக்கையை கவனத்தில் கொள்ளக்கூடாது என்றும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கூடாது எனவும் தமிழக அரசின் விரிவான அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை