மின்சாரம் தயாரிக்கவே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு : அமைச்சர் டி.கே. சிவக்குமார்

தினகரன்  தினகரன்
மின்சாரம் தயாரிக்கவே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு : அமைச்சர் டி.கே. சிவக்குமார்

பெங்களூரு : மேகதாது விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்துள்ள வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும், சட்ட ரீதியான விஷயங்களை பரிசீலித்து தான் திட்ட வரைவு அறிக்கை தயார் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடியில் அணை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்த நிலையில், மேகதாது திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேகதாது விவகாரத்தில் பேசி தீர்வு காணவே கர்நாடக அரசு விரும்புகிறது என்று கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே. சிவக்குமார் பேட்டியளித்துள்ளார். காவிரியின் குறுக்கே அணைகட்ட தமிழகத்துக்கு வாய்ப்பு இல்லை, ஆனால் எங்களுக்கு வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகினால் என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம் என்றும், அதுகுறித்து சட்டக்குழுவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு தடை ஆணை பெற நாங்கள் விடமாட்டோம் என்று கூறியுள்ள அமைச்சர் டி.கே. சிவக்குமார், விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என தகவல் அளித்துள்ளார். நடப்பாண்டில் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட 395 டிஎம்சி தண்ணீரை முழுமையாக பயன்படுத்தவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் உச்சநீதிமன்றம் செல்வதை தமிழகம் தவிர்க்க வேண்டும் என்றும், மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 400 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கவே மேகதாது அணை கட்டுவதாகவும், மேகதாதுவில் கட்ட உள்ள அணையால் ஒரு ஏக்கர் நிலத்தை கூட பாசான வசதிக்கு பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்துள்ளார். மேலும் எங்களது அதிகாரத்தை எக்காரணம் கொண்டும் தவறாக பயன்படுத்த மாட்டோம் என்றும், நாங்கள் அனைவரும் சகோதரர்கள், சண்டையிட விரும்பவில்லை என அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார். மேகதாது பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என்றும், அணை கட்டுவது குறித்து மேகதாதுவில் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார். முன்னதாக மேகதாது திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மூலக்கதை