கடன் தொல்லையால் விரக்தி தம்பதி தற்கொலை முயற்சி: கணவர் சாவு; மனைவி சீரியஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடன் தொல்லையால் விரக்தி தம்பதி தற்கொலை முயற்சி: கணவர் சாவு; மனைவி சீரியஸ்

புதுச்சேரி: புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (54). இவரது மனைவி காஞ்சனா (47).

இவர்களுக்கு சீனுவாசன் என்ற மகனும், கலைவாணி என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் தங்களது வீட்டை ஒட்டி ஸ்டேஷனரி கடை நடத்தி வந்தனர். தொழில் நஷ்டம் காரணமாகவும், குழந்தைகளின் படிப்பின் நிமித்தமாகவும் பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே, சொந்த வீட்டை விற்று கடனில் பாதியை ராதாகிருஷ்ணன் அடைத்துள்ளார். ஆனால் மற்ற கடன்களை முழுமையாக செலுத்த முடியாத நிலையில் ராதாகிருஷ்ணனும், காஞ்சனாவும் வேதனையில் இருந்துள்ளனர்.

குடும்ப சூழல் கருதி அவரது மகன் சீனுவாசன் சில வாரங்களுக்கு முன்பு மும்பைக்கு வேலைக்கு சென்றுள்ளார். கலைவாணியும் சென்னைக்கு சென்று வேலைதேடி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ராதாகிருஷ்ணனும், காஞ்சனாவும் கடன் பிரச்னையால் தற்கொலை முடிவுக்கு வந்துள்ளனர்.

இதையடுத்து அன்றைய தினம் இரவில் அதிகளவில் தூக்க மாத்திரைகளை வாங்கி இருவரும் சாப்பிட்டதோடு, விஷத்தையும் குடித்ததாக தெரிகிறது. இதில் 2 பேரும் மயக்கமடைந்து உயிருக்கு போராடியுள்ளனர்.

ஆனால் அதிகாலை வரை உயிர் பிரியாததால் ராதாகிருஷ்ணன், அங்குள்ள அறையில் தூக்கில் தொங்கியுள்ளார். அவர் துடிதுடித்து இறந்த நிலையில் காஞ்சனா தொடர்ந்து மயக்கத்திலே இருந்துள்ளார்.

இதனிடையே தனது பெற்றோருக்கு சீனுவாசன் போன் செய்தபோது வெகுநேரமாக அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்த அவர், உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு விரைந்தனர்.   வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது ராதாகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அதேவேளையில் காஞ்சனா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.   அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை