எரிமேலியில் உள்ள வாவர் பள்ளிவாசலுக்கு 40 இளம் பெண்களை கொண்டு செல்ல திட்டம்: இந்து அமைப்பு அறிவிப்பால் சபரிமலையில் பதற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எரிமேலியில் உள்ள வாவர் பள்ளிவாசலுக்கு 40 இளம் பெண்களை கொண்டு செல்ல திட்டம்: இந்து அமைப்பு அறிவிப்பால் சபரிமலையில் பதற்றம்

திருவனந்தபுரம்: எரிமேலியில் உள்ள வாவர் பள்ளிவாசலுக்கு 40 இளம் பெண்களை கொண்டு செல்ல தமிழகத்தை சேர்ந்த இந்து அமைப்பு திட்டமிட்டுள்ளதால் சபரிமலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. சபரிமலையில் இளம் பெண்கள் தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது முதல் கேரளாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தற்போது 2 ஐஜிக்கள், 6 எஸ்பிக்கள் தலைமையில் 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மண்டலகால பூஜைக்காக நடை திறந்து 3 வாரங்கள் ஆன பிறகும் இதுவரையிலும் இளம் பெண்கள் யாரும் தரிசனம் செய்யவில்லை. ஆந்திராவை சேர்ந்த 2 இளம் பெண்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தரிசனத்துக்கு வந்தனர்.



பக்தர்களின் எதிர்ப்பால் அவர்கள் திரும்பி சென்றனர். இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்து அமைப்பு ஒன்று 40 இளம் பெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக, கேரள காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக கேரள தென்மண்டல ஏடிஜிபி சுனில்காந்த் பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் மாவட்ட எஸ்பிக்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டை சேர்ந்த இந்து அமைப்பு ஒன்று எரிமேலியில் உள்ள வாவர் பள்ளி வாசலுக்கு 40 இளம் பெண்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. எனவே பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் வாவர் பள்ளி வாசலுக்கு இளம் பெண்களை அழைத்து செல்வதன் மூலம் பிரச்னையை தீவிரப்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த அந்த அமைப்பு திட்டமிட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து எரிமேலி, சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை: சபரிமலைக்கு செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் உணவு பொருட்கள், பூஜை பொருட்கள் போன்றவற்றை பிளாஸ்டிக் கவர்களில் பொதிந்து கொண்டு செல்கின்றனர்.

பொருட்களை பயன்படுத்தியபின் பிளாஸ்டிக் கவர்களை வெளியில் வீசுகின்றனர். இவ்வாறு வீசப்படும் பிளாஸ்டிக் தினமும் டன் கணக்கில் சேருகின்றன.

இவற்றை உண்பதால் யானை உள்பட வன விலகுங்களுக்கு பெரும் தீங்கு ஏற்படுகிறது. அதோடு சுற்றுச்சூழலும் மாசு படுகிறது.

எனவே சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பாட்டில் கூட விற்க அனுமதி கிடையாது.

இந்த தடை இந்த வருடம் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பக்தர்கள் இருமுடி கட்டில் பிளாஸ்டிக் கவர்களால் பொதியப்பட்ட விபூதி, கற்பூரம், சூடம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வருகின்றனர்.



பிஸ்கெட், குளிர்பானங்கள், பற்பசை, தேங்காய் எண்ணெய் போன்றவையும் பிளாஸ்டிக்கால் பொதியப்பட்டு கொண்டு வருகின்றனர். தற்போது இவற்றுக்கும் வனத்துறை தடை விதித்துள்ளது.

இதன்படி சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளிலும் இந்த பொருட்கள் விற்பனை செய்ய வனத்துறை தடை விதித்துள்ளது. அதோடு கடைகளில் விற்பனைக்காக வைத்திருக்கும் பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் பக்தர்களும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு: சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று அதிரடிப்படை வீரர்கள், கமாண்டோ படை, போலீசார் அணிவகுப்பு நடத்தினர். தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

சந்தேகப்படும்படியான பக்தர்களின் இருமுடி கட்டை பரிசோதிக்கவும் போலீசார் தீர்மானித்துள்ளனர்.

.

மூலக்கதை