தருண் அகர்வால் குழு அறிக்கையின்படி ஆலையை மீண்டும் இயக்க தயார்..: ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தருண் அகர்வால் குழு அறிக்கையின்படி ஆலையை மீண்டும் இயக்க தயார்..: ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவிப்பு

புதுடெல்லி: தருண் அகர்வால் குழு அளித்த அறிக்கையின்படி ஆலையை மீண்டும் இயக்க தயாராக இருப்பதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்துள்ளது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு ஏற்படுத்துவதாக கூறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22ம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனிடையே ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான பசுமை தீர்ப்பாய குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது. இந்த நிலையில், அகர்வால் குழு சமீபத்தில் தனது அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது. அதில், ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை நம்ப முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முன் நிர்வாக தரப்பு வாதத்தை தமிழக அரசு கேட்கவில்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது தவறு, சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கலாம் என கூறியிருந்தது. அதில், நிபந்தனைகளாக ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் நிலத்தடி நீரை கண்காணிக்க வேண்டும், அப்பகுதியில் காற்று மற்றும் நீர் மாசை கண்காணிக்க வேண்டும் போன்றவற்றை குறிப்பிட்டு, நீதிபதி அகர்வால் குழு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் வேதாந்தா குழுமம் இன்று தனது அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் தருண் அகர்வால் குழுவின் பரிந்துரையை ஏற்று மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை