பலத்த பாதுகாப்புடன் தெலங்கானா, ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பலத்த பாதுகாப்புடன் தெலங்கானா, ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு

ஐதராபாத்: தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தெலங்கானா, ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

தெலங்கானா மாநிலத்தில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்கு தேச கூட்டணி, பாஜ இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் முதல்வர் சந்திரசேகர ராவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ்-தெலுங்கு தேச கூட்டணி, பாஜவினர் தீவிரம் காட்டினர். போட்டி கடுமையாக இருந்த நிலையில், தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

1,821 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 
ராஜஸ்தானில் ஆளும் பாஜ, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட தலைவர்கள் இங்கு பிரசாரம் மேற்கொண்டனர்.   ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் அங்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

199 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. 2,188 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நாளை காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.

 வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த மாநிலங்களின் முடிவுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.


.

மூலக்கதை