புதுச்சேரியில் பாஜ எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதுச்சேரியில் பாஜ எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: புதுச்சேரியில், பாஜ எம்எல்ஏக்கள் 3 பேரின் நியமனம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுச்சேரி பாஜ தலைவர் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரை நியமன எம்எல்ஏக்களாக ஆளுநர் கிரண்பேடி கடந்த ஜூன் மாதம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், யூனியன் பிரதேச சட்ட விதிகளின்படி, இவர்களின் பதவி ஏற்கப்படாததால் 3 எம்எல்ஏக்களின் நியமனத்தை சபாநாயகர் வைத்தியலிங்கம் அங்கீகரிக்க மறுத்துவிட்டார்.
நியமன எம்எல்ஏக்களுக்கான அனைத்து சலுகைகளும் மறுக்கப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினரும், முதல்வரின் நாடாளுமன்ற செயலருமான லட்சுமி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.



இந்நிலையில், கடந்த விசாரணையின்போது மனுதாரர் சார்பில், ‘‘3 எம்எல்ஏக்கள் விவகாரத்தை பொருத்தவரை மத்திய அரசு, மாநில அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை. புதுவை மாநிலத்தில் 30 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கும் நிலையில், இந்த 3 எம்எல்ஏக்கள் நியமனம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.

எனவே, அவர்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிடப்பட்டது. இதற்கு மத்திய அரசு மற்றும் நியமன எம்எல்ஏக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், புதுவை மாநில பாஜ எம்எல்ஏக்கள் வழக்கில் சட்டவிதிகள் கண்டிப்பாக மீறக்கூடாது என தெரிவித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 20ம் தேதி ஒத்திவைத்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. கே. சிக்ரி, அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர்.



நீதிபதிகள் உத்தரவில், ‘‘யூனியன் பிரதேசங்களின் விவகாரங்களில் தலையிட மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. எனவே, இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு வியாபார தன்மை கொண்ட நோக்கங்களோடு செயல்பட கூடாது.

புதுச்சேரி தனி மாநிலம் கிடையாது. எனவே, இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிட அதிகாரம் இல்லை.

பாஜ எம்எல்ஏக்களை ஆளுநர் கிரண்பேடி நியமனம் செய்தது செல்லும். அதேபோல் சட்டசபைக்குள் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அனைத்து அதிகாரங்களையும் வழங்க வேண்டும்.

வருகை பதிவேட்டில் கையெழுத்திடுவது, தனி அறை, ஊதியம் என மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உண்டான அனைத்து சலுகைகளையும் இவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது’’ என தெரிவித்தனர்.


.

மூலக்கதை