சுனாமி எச்சரிக்கை நியூ கலிடோனியாவில் பயங்கர நிலநடுக்கம்

தினகரன்  தினகரன்
சுனாமி எச்சரிக்கை நியூ கலிடோனியாவில் பயங்கர நிலநடுக்கம்

நவுமியா: தெற்கு பசிபிக் நாடான நியூ கலிடோனியா தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நியூ கலிடோனியாவின் நவுமியா அருகே 300 கி.மீ. தொலைவை மையமாக கொண்டு நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து  அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன.  நிலநடுக்கம் ஏற்பட்ட மையத்தில் இருந்து சுமார் 1000 கிமீ.க்கு உட்பட்ட பகுதிகளில் கடும் சுனாமி  தாக்குவதற்கு வாய்ப்பிருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து  நியூ கலிடோனியா  உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர். பொதுமக்களுக்கு சுனாமி குறித்து எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது. சுமார் 3 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள்  உருவாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், நியூகலிடோனியா மக்கள் நிலநடுக்கத்தை உணரவில்லை என்றும் சுனாமி எச்சரிக்கை கருவிகள் உடனடியாக செயல்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் சில  மணி நேரங்களுக்கு பின் இது திரும்ப பெறப்பட்டது.

மூலக்கதை