தென் ஆப்ரிக்க அரசு வழக்கறிஞராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்

தினமலர்  தினமலர்
தென் ஆப்ரிக்க அரசு வழக்கறிஞராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில், அரசு வழக்குகளை விசாரிக்கும் கமிஷனின் இயக்குனராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஆப்ரிக்க நாடான, தென் ஆப்ரிக்காவில், அரசு வழக்குகளை விசாரிக்கும் கமிஷனின் இயக்குனராக இருந்த, ஷான் ஆபிரகாம்ஸ், முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா தொடர்பான ஊழல் வழக்குகளில், அவருக்கு சாதகமாக செயல்படுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதன் பின், அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, புதிய இயக்குனரை நியமிக்கும் பணியில், தென் ஆப்ரிக்க அரசு ஈடுபட்டது.

இந்நிலையில், அந்த பதவிக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஷமிலா பட்டோஹி என்ற பெண் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, தென் ஆப்ரிக்க அதிபர், சிரில் ராமாபோசா வெளியிட்டு உள்ளார்.

இந்த பதவியில், முதன்முறையாக, பெண் வழக்கறிஞர் ஷமிலா பட்டோஹி நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள ஷமிலா பட்டோஹி, 2019 பிப்ரவரி மாதத்தில் பொறுப்பேற்க உள்ளார்.

கடந்த, 1986ல், வழக்கறிஞராக பணியை துவங்கிய ஷமிலா பட்டோஹி, பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாடி உள்ளார். மேலும் அவர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், ஒன்பது ஆண்டுகளாக சட்ட ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.

Download for free from the Store »

மூலக்கதை