அபராதங்களைச் செலுத்தாமல் மலேசியாவை விட்டு வெளியேற சிங்கப்பூர் வாகனஓட்டிகளை அனுமதிக்கக் கூடாது: செனட்டர் ரபியா அலி

தினகரன்  தினகரன்
அபராதங்களைச் செலுத்தாமல் மலேசியாவை விட்டு வெளியேற சிங்கப்பூர் வாகனஓட்டிகளை அனுமதிக்கக் கூடாது: செனட்டர் ரபியா அலி

கோலாலம்பூர்: அபராதங்களைச் செலுத்தாமல் மலேசியாவை விட்டு வெளியேற சிங்கப்பூர் வாகனஓட்டிகளை அனுமதிக்கக் கூடாது என்று மலேசிய செனட்டர் டடுக் ரபியா அலி (Datuk Rabiah Ali) கோரிக்கை விடுத்துள்ளார். சிங்கப்பூரில் இருந்து ஆடம்பர கார் ஓட்டுனர்கள் மற்றும் உயர்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மூலம் சட்ட விரோதமாக பந்தயங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் வாகனம் ஓட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மலேசியாவில் 2010-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 2,75,663 சாலைப் போக்குவரத்து அபராதங்கள் செலுத்தப்படாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் சுமார் 1,84,024 அபராதங்கள் சிங்கப்பூர் வாகனஓட்டிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மலேசியாவில் வேகக் கட்டுப்பாட்டை மீறி கண்மூடித்தனமாக வாகனங்களைச் செலுத்தும் ஓட்டுநர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் மலேசிய நெடுஞ்சாலைகளில் சிங்கப்பூர் ஓட்டுநர்கள் அதிக வேகத்தில் வாகனத்தைச் செலுத்தும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறினார்.

மூலக்கதை