அடுத்த செப்டம்பருடன் முடிவுக்கு வருகிறது பேஜர் சேவை : ஜப்பான் நிறுவனம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அடுத்த செப்டம்பருடன் முடிவுக்கு வருகிறது பேஜர் சேவை : ஜப்பான் நிறுவனம் அறிவிப்பு

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட பேஜர் சேவை, அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறுத்திக் கொள்ளப்பட உள்ளதாக டோக்கியோ டெலி மெசேஜ் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது 1500 பேர் இந்த சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 1950-60 காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட பேஜர், 1980-ம் ஆண்டுகளில் மிக பிரபலமாக இருந்தது. 1996-ல் டோக்கியோ டெலி மெசேஜ் நிறுவனத்தின் சந்தாதாரர்களாக சுமார் 12 லட்சம் பேர் வரை இருந்தனர். ஆனால் காலமும் தொழில்நுட்பமும் மாற மாற தொலைபேசிகளிலேயே பல வசதிகள் புகுத்தப்பட்டன. பின்னர் அடிப்படை மொபைல் போன்களால் ஆக்கிரமிக்கப்பட்ட உலகம், தற்போது ஸ்மார்ட் போன்களில் சிக்குண்டு கிடக்கிறது.இந்த நிலையில் காலப்போக்கில் பேஜர் உபயோகம் அறவே இல்லாமல் போய்விட்டது. எனினும் ஜப்பானில் மட்டும் சில ஆயிரம் பேர் தொடர்ந்து உபயோகித்து வந்தனர். இந்த எண்ணிக்கையும் தற்போது 1,500 ஆகி விட்டது. டோக்கியோ டெலி மெசேஜ் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக பேஜர் உற்பத்தியையும் நிறுத்திவிட்டது. இப்போதும் கூட மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் பேஜரைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று ஜப்பான் டைம்ஸ் நிறுவனம் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்தோடு பேஜர் சேவையை நிறுத்தி கொள்ள உள்ளதாக டோக்கியோ டெலிமெசேஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மூலக்கதை