தேசிய ஜூனியர் தடகளம் தமிழகம் 2வது இடம்

தினகரன்  தினகரன்
தேசிய ஜூனியர் தடகளம் தமிழகம் 2வது இடம்

திருப்பதி: தேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக அணி 4 தங்கம் உட்பட 14 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது. வெங்கடேஸ்வரா பல்கலை. தாரகராமா விளையாட்டு மைதானத்தில் நடந்த இத்தொடரில், 309 வீரர், வீராங்கனைகள் அடங்கிய தமிழக அணி களமிறங்கியது. மகளிர் உயரம் தாண்டுதலில் லட்சண்யா (கடலூர்), ஆண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜாய் அலெக்ஸ் (காஞ்சிபுரம்), மகளிர் 200 மீட்டர் ஓட்டத்தில் ஷரோன் மரியா (நீலகிரி), மகளிர் குண்டு எறிதலில் சர்மிளா (ராமநாதபுரம்)  ஆகியோர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.மேலும், மகளிர் உயரம் தாண்டுதலில் பிரதிக்‌ஷா, யமுனா (காஞ்சிபுரம்), ஆண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் முகமது அன்ஸ் (கடலூர்), மகளிர் உயரம் தாண்டுதலில் வைதேகி வசிஸ்தா (நீலகிரி), மகளிர் நீளம் தாண்டுதலில் காருண்யா நல்லி (கரூர்), மகளிர் ஈட்டி எறிதலில் பிரியதர்ஷினி (பெரம்பலூர்) ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர். ஆண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் முகமது சையத் (கடலூர்), மகளிர் 100 மீட்டர் தடை தாண்டுதலில் அட்சயா (திருவள்ளூர்), நீளம் தாண்டுதலில் மரியாள் அன் மேத்தா (சென்னை), குண்டு எறிதலில் மோனிகா (காஞ்சிபுரம்)ஆகியோர் வெண்கலம் வென்றனர். மத்தியப்பிரதேச அணி  7 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலத்துடன் முதலிடம் பிடித்தது. தமிழகம் 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 2வது இடம் பெற்றது. 3 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலத்துடன் உத்தரபிரதேசம் 3வது இடமும், 2 தங்கம், 1 வெண்கலத்துடன் ஆந்திரா 8வது இடமும் பிடித்தன.

மூலக்கதை