இந்திய அணி வீரர்கள் அடிலெய்டில் தீவிர பயிற்சி: முதல் ‘டெஸ்ட்’ நாளை ஆரம்பம்

தினகரன்  தினகரன்
இந்திய அணி வீரர்கள் அடிலெய்டில் தீவிர பயிற்சி: முதல் ‘டெஸ்ட்’ நாளை ஆரம்பம்

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள இந்திய அணி வீரர்கள், அடிலெய்டில் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, முதலில் நடந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்து இரு அணிகளும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற மோசமான வரலாற்றை கோஹ்லி & கோ மாற்றியமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது. இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிரமாகப் பயிற்சி செய்தனர். ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என பராமரிப்பாளர் கூறியுள்ளதால், இந்திய வேகங்கள் உற்சாகமாக வலைப்பயிற்சி மேற்கொண்டனர். கேப்டன் விராத் கோஹ்லி பேட்டிங் பயிற்சியில் தீவிரம் காட்டினார். கடந்த 1948ம் ஆண்டு டான் பிராட்மேன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியிடம் தொடரை இழந்த இந்திய அணி, 70 ஆண்டுகளில் ஆஸி. சென்று விளையாடிய 44 டெஸ்டில் 5 வெற்றி மட்டுமே கண்டுள்ளதுடன், ஒரு முறை கூட தொடரை கைப்பற்றியதில்லை. தற்போது சூப்பர் பார்மில் உள்ள கோஹ்லி தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் பலவீனமடைந்துள்ள ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாதனை படைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 2014ல் இந்திய அணியின் ஆஸி. சுற்றுப்பயணத்தில் கோஹ்லி 4 போட்டியில் 692 ரன் விளாசியது குறிப்பிடத்தக்கது. எனினும், சக வீரர்கள் ஒத்துழைக்காததால் இந்தியா 0-2 என தொடரை இழந்தது. * நடப்பு டெஸ்ட் சீசனில் 18 இன்னிங்சில் விளையாடி உள்ள கோஹ்லி 1,063 ரன் குவித்து உலக அளவில் முன்னிலை வகிக்கிறார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 24 இன்னிங்சில் 948 ரன் எடுத்து 2வது இடத்தில் உள்ளார்.* இந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் கோஹ்லி 286 ரன் விளாசிய நிலையில், இந்தியா 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இங்கிலாந்து சென்று விளையாடிய டெஸ்ட் தொடரிலும் கேப்டன் கோஹ்லி சிறப்பாக செயல்பட்டு 593 ரன் குவித்தாலும், இந்திய அணி 1-4 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. எனவே, சக பேட்ஸ்மேன்கள் கை கொடுத்தால் மட்டுமே கோஹ்லியால் வரலாற்று சாதனை படைக்க முடியும்.

மூலக்கதை