உலக கோப்பை ஹாக்கி காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக கோப்பை ஹாக்கி காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா

புவனேஸ்வர்:  உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில், அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டிகள், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில், அர்ஜெண்டினா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே அர்ஜென்டினா அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

அந்த அணி வீரர் மாஸில்லி 23வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார். 1-0 என முன்னிலை பெற்ற அர்ஜென்டினாவின் ஆதிக்கம் இடைவேளைக்கு பிறகும் தொடர்ந்தது.

இந்நிலையில், 41வது நிமிடத்தில் விலா, 55வது நிமிடத்தில் மார்டினஸ் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். கோல் அடிக்க நியூசிலாந்து வீரர்கள் மேற்கொண்ட முயற்சி எதுவும் பலிக்கவில்லை.

ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது.

இப்போட்டியில், 3 புள்ளிகளை பெற்ற அர்ஜெண்டினா அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.

இதன்மூலம், கால் இறுதி வாய்ப்பையும் உறுதி செய்து கொண்டது. ஸ்பெயின்-பிரான்ஸ் ஆட்டம் டிரா:  மற்றொரு ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின்-பிரான்ஸ் அணிகள் மோதின.

இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. பிரான்ஸ் சார்பில் கிளமென்ட் 6வது நிமிடத்திலும், ஸ்பெயின் வீரர் இக்லெசியாஸ் 48வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

அதற்கு பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால், 1-1 என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிகளும் தலா 1 புள்ளிகள் கிடைத்தன.

இன்று நடைபெறும் ‘பி’ பிரிவு லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து, அயர்லாந்து-சீனா ஆகிய அணிகள் மோதுகின்றன.

.

மூலக்கதை