‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்குமா இந்தியா | டிசம்பர் 03, 2018

தினமலர்  தினமலர்
‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்குமா இந்தியா | டிசம்பர் 03, 2018

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு போட்டியை ‘டிரா’ செய்தால் போதுமானது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வெளியான டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த நான்கு இடங்களில் முறையே இங்கிலாந்து (108 புள்ளி), தென் ஆப்ரிக்கா (106), நியூசிலாந்து (102), ஆஸ்திரேலியா (102) அணிகள் உள்ளன.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் 6ல் அடிலெய்டில் துவங்குகிறது. டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி, ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்க, குறைந்தபட்சம் ஒரு போட்டியை ‘டிரா’ செய்தால் போதுமானது.

இந்திய அணி 4–0 என தொடரை முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில், 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடரும். ஆஸ்திரேலிய அணி 97 புள்ளிகளுடன் 5வது இடத்தில் நீடிக்கும்.

இந்திய அணி, தொடரை 0–4 என முழுமையாக இழக்கும் பட்சத்தில் 108 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்படும். தசம புள்ளிகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி (108) 2வது இடம் பிடிக்கும். ஆஸ்திரேலிய அணி 110 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறிவிடும்.

மூலக்கதை