வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப் படாத நிலங்களுக்கு தெரு மதிப்பு நிர்ணயிக்கக் கூடாது: சார்பதிவாளர்களுக்கு உத்தரவு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்படாத நிலங்களுக்கு தெரு மதிப்பு நிர்ணயிக்கக் கூடாது என்று சார்பதிவாளர்களுக்கு ஐஜி உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் அனைத்து மண்டல டிஐஜிக்கள், சார்பதிவாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

சந்தை மதிப்பு நிர்ணயம் செய்தல் தொடர்பாக வழங்கப்பட்ட நெறிமுறைகளில் தெருக்களில் வரும் சர்வே எண்களுக்கு மதிப்பு நிர்ணயிக்கக்கூடாது எனவும் வழிகாட்டியில் ‘தெரு மதிப்பு காண்க’ என்று குறிக்க வேண்டும் எனவும், தெருவில் அமைந்துள்ள பகுதிகளுக்கு உள்ள சர்வே எண்களுக்கு மதிப்பு நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும் ஆணையிடப்பட்டு உள்ளது. 

ஆனால், சில பகுதிகளில் தெருக்களில் கட்டுப்படாத சர்வே எண்களுக்கு தவறாக ‘தெரு மதிப்பு காண்க’ என்று குறிக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்த சர்வே எண்களில் காட்டுபட்ட சொத்து பதிவுக்கு வரும் நிலையில், ஆவணத்தில் தெரு விவரம் குறிப்பிடாமல் தாக்கல் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில், பதிவு அலுவலரால் அந்த ஊரின் உயர்ந்த பட்ச தெருமதிப்பு பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு பின்பற்றாத ஊரின் உயர்ந்த பட்ச மதிப்பு பரிந்துரைத்து மாவட்ட வருவாய் அலுவலர் மதிப்பு நிர்ணயம் செய்ய அனுப்பப் படுகிறது. 

இதனால், சம்பந்தப்பட்ட ஆவணதாரர் உடனே பதிவு செய்த ஆவணத்தை திரும்ப பெற இயலாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் மதிப்புக் குழு கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 

அதன்படி வழிகாட்டியில் தெரு மதிப்பு காண்க என தவறாக வகைப்படுத்தப்பட்டு, ஆவணத்தில் சொத்து காட்டப்பட்ட விவரம் தெரிவிக்காமல் இருந்தாலோ அல்லது ஆவணதாரர் சொத்து தெருவில் அமையவில்லை என குறிப்பிட்டாலோ பதிவுக்கு தாக்கல் செய்த ஆவணத்தை நிலுவை வைத்து பின் உரிய நடவடிக்கைக்கு டிஐஜி முனமொழிவு அனுப்ப வேண்டும். 

சம்பந்தப்பட்ட டிஐஜி இடத்தை பார்வையிட்டும், சம்பந்தப்பட்ட சர்வே எண்ணின் வில்லங்க சான்றில் முன் ஆவணங்கள் ஏதாவது தெரு மதிப்பில் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை பரிசீலித்தும் அந்த சர்வே எண்ணில் கண்ட சொத்தானது தெருவில் அமையப்பெறாத நிலையில் உரிய வகைப்பாட்டில் அந்த சர்வே எண்ணை பொருத்தலாம். 

சொத்து விவசாய நிலமாக இருப்பின் உரிய விவசாய நில வகைப்பாட்டிலும், மனையிடமாக இருப்பின் உரிய மனை நில வகைப்பாட்டிலும் பொறுத்து தெரிவிக்கப்படுகிறது. 

பொருத்தமான வகைப்பாடு இல்லாத நிலையில் புதுவகைப்பாடு டிஐஜியால் ஏற்றிக் கொள்ளலாம். ஒரு சர்வே எண் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ளது என்பதாலேயே தவறான மனை மதிப்பு வகைப்படில் பொறுத்த வேண்டும் என்பதில்லை. அந்த சர்வே எண்ணில் கண்ட சொத்து விவசாய நிலமாக இருப்பின் உரிய விவசாய மதிப்பு வகைப்பாட்டில் பொறுத்த வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை