"உலகிற்கு இந்தியா வழங்கி இருக்கும் பரிசு யோகா!"- பிரதமர் மோடி புகழாரம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 ‘‘உடல்நலம், ஆரோக்கியம், மன அமைதி பெறுவதற்காக உலகிற்கு இந்தியா வழங்கியிருக்கும் பரிசு யோகா’’ என அர்ஜெண்டினாவில் பிரதமர் மோடி பேசினார். 

ஜி20 மாநாட்டில் பங்கேற்ற அவர் பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேசினார். ஜி20 அமைப்பில் இந்தியா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட 20 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அமைப்பின் 13வது உச்சி மாநாடு அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏர்ஸில்  தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து அவர் ‘அமைதிக்கான யோகா’ என்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில், பலரும் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர். 

நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: 

சுமார் 24 மணி நேரம் பயணம் செய்து, 15,000 கிமீ. தூரம் கடந்து சில மணி நேரத்திற்கு முன்பாகத்தான் இங்கு வந்தேன். உங்களின் அன்பையும், உற்சாகத்தையும் பார்க்கும் போது, இந்தியாவை விட்டு வெளியில் இருப்பதாக நான் உணரவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு ‘அமைதிக்கான யோகா’ என்ற பெயரை காட்டிலும், வேறு நல்ல பெயர் சூட்டுவது என்பது மிகவும் கடினமானது.

உங்களின் உடலையும், மனதையும் சீராக வைத்திருக்க உதவுவதுதான் யோகா. அது, உடலுக்கு வலு அளித்து, மனதை சாந்தப்படுத்துகிறது. உடல் நலம், ஆரோக்கியம், மன அமைதியை பெறுவதற்காக உலகிற்கு இந்தியா வழங்கியிருக்கும் பரிசுதான் யோகா.

இது, ஆரோக்கியம், மகிழ்ச்சியின் மூலம் நம் இரு நாடுகளையும் இணைக்கிறது.  இந்தியாவின் கலை, இசை, நடனத்தின் மீது நீங்கள் ஆர்வம் கொண்டிருப்பதைப் போல, எங்கள் நாட்டிலும் அர்ஜெண்டினா கால்பந்து வீரர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். எங்களின் அன்றாட விவாதத்தில் உச்சரிக்கும் பெயர்களில் மரடோனாவும் ஒன்று.

ஒடிசாவில் நடக்கும் உலக கோப்பை ஹாக்கி தொடரை அர்ஜெண்டினா வெற்றியுடன் தொடங்கி இருப்பதற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இதுவே, ஜி20 மாநாடு அர்ஜெண்டினாவில் நடப்பதற்காக நாங்கள் பெருமை, மகிழ்ச்சி அடைவதற்கான காரணம்.

இம்மாநாட்டில், உலக பொருளாதாரம், நிலையான வளர்ச்சி, பருவநிலை மாற்றம், பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. இவை ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் ஆகும். 

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி, சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள், வர்த்தக மேம்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், மோடி, ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்சை சந்தித்து பேசினார். 

மேலும், மாநாட்டில் முதல் முறையாக அமெரிக்கா, ஜப்பான், இந்தியா முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. சீன அதிபர் ஜின்பிங்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இந்த ஆண்டு ஜி20 மாநாட்டின் மையக்கருத்து, ‘நியாயமான, நிலையான வளர்ச்சிக்கான ஒருமித்த கருத்தை உருவாக்குதல்’ என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை